பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பள்ளியெழுச்சி 269 இவைகளும் அந்த ஒளிக்கற்றைகள் வரும் வழியில்தானே இருக்கின்றன. அக்கோள்களுள் சில கடுங்குளிருடன் எப்பொழுதும் இருக்கின்றன. அதே ஒளிக் கற்றைகள் செவ்வாய், புதன் ஆகிய கோள்களில் படும் பொழுது அளவுக்கதிகமான தாங்க முடியாத குட்டை உண்டாக்குகின்றன. பூமி ஒன்றில்தான் ஒளி, உஷ்ணம் என்பவை ஒர் அளவுக்கு உட்பட்டு உயிர்கள் வாழ உதவி புரிகின்றன. இதனை மனத்துட் கொண்டு அடிகளார் பாடலின் முற்பகுதியைப் பார்ப்போமாக. இந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற ஆறு' என்கிறார். அதாவது, இந்தப் பூவுலகம்தான் சிவன் வந்து உயிர்களை ஆட்கொள்கின்ற இடமாக அமைந்துள்ளது என்கிறார். இவ்வாறு கூறவே, இந்தப் பூமியல்லாத தேவலோகம், சத்யலோகம் முதலிய இடங்கள் சிவனுடைய எல்லைக் குட்பட்டு இருப்பினும், அவனுடைய அருள் அந்த உலகங்களில் வெளிப்பட்டு அவர்களை ஆட்கொள்வ தில்லை என்பது பெறப்பட்டுள்ளது. ஆதலால், வைகுந்தத்திற்குரிய நாரணனும், சத்திய லோகத்திற்குரிய நான்முகனும் கவலைப்படத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள் எதுபற்றிக் கவலைப்படுகிறார்கள் என்பதைப் பற்றி அடிகளார் விளக்கமாகப் பேசுகிறார். சிவனால் உய்யக் கொள்ளப்பட வேண்டுமானால், இந்தப் புவனியில் போய் பிறப்பதைத் தவிர வேறு வழி யில்லை. எனவே, மண்ணுலகில் சென்று பிறப்பு ஒன்றை எடுக்காமல், இங்கே இருந்துகொண்டு, நம் வாழ்நாளை வீணாளாகப் போக்குகின்றோமே என்று கவலையுறு கின்றனர்.