பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 : திருவாசகம் - சில சிந்தனைகள் — 3 இரண்டு பதிகங்கள் பாடப்பெற்றிருந்தன. திருமுறைகள் தொகுக்கப்பெற்ற காலத்தில் அம்மையாரின் இரண்டு பதிகங்கள், இரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி ஆகியவை மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அம்மையாரின் பாடல்கள் தெரியவந்த காலத்தில் மூவர் முதலிகளின் திருப்பதிகங்கள், ஏற்கனவே முதல் ஏழு திருமுறைகளாக வகுக்கப் பெற்றுவிட்டன. எனவே, தாளத்தோடு பாடப்பெறும் அம்மையாரின் திருவாலங்காட்டுப் பதிகம் இரண்டையும் மூத்த திருப்பதிகம் என்று பெயரிட்டு வழங்கினர். மூத்த திருப்பதிகம் என்ற பெயர் வந்த வரலாறு இதுதான். இந்த அடிப்படை அறியாத சிலர் திருவாசகத்தில் வரும் பத்துப் பாடல்களுக்கு கோயில் மூத்த திருப்பதிகம் என்று பெயரிட்டது அறியாமையால் விளைந்ததாகும். ஆலங்காட்டில் ஆடுபவனைப் பாடும் அம்மையாரின் இருபது பாடல்களுக்கு மூத்த திருப்பதிகம் என்று பெயர் வந்ததால், தில்லையில் ஆடும் பெருமானைப் பாடும் திருவாசகப் பாடல்களுக்கும் இப்பெயர் பொருந்தும் என்று நினைத்து வைத்திருக்கலாம். இதிலும் ஒரு சிறு குறை உள்ளது. அம்மையாரின் பாடல் இருபது. அதற்கேற்ப இருபது பாடல்கள் இங்கும் இருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள், கோயில் மூத்த திருப்பதிகம் பத்து, கோயில் திருப்பதிகம் பத்து என இருபது பாடல்களைத் தொகுத்துவிட்டனர். ஆனால், கோயில் திருப்பதிகம் என்ற பெயரில் உள்ள பத்துப் பாடல்களும் திருப்பெருந்துறைப் பெருமானைப் பற்றியனவாகும். அன்றியும், பதிகம் என்றால், தாளத்தோடு பாடப்பெறும் பாடல்களாக இருத்தல் வேண்டும். திருவாசகத்தில் உள்ள இப்பகுதிப் பாடல்கள் இருபதும் தாளத்தோடு பாடப்பெறும் வகையில் அமையவில்லை.