பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 அகங்காரம் செயலிழந்த நிலையில் மனம், சித்தம், புத்தி என்பவை எவ்வித ஒருங்கிணைப்பும் இல்லாமல் தனித்தனியே பணிபுரியும். இவர்கள் பயித்தியக்காரர்கள் எனப்படுவர். அகங்காரம் செயலிழந்தாலும் மனம், சித்தம், புத்தி என்பவை ஒருங்கே இறையனுபவத்தில் தோய்ந்து நிற்பவர்களை இறையனுபவ அதீதர் என்று கூறுவர். இந்த ஒருங்கிணைந்த நிலையைத்தான் பித்து எம்பிரானொடும் ஆட ஆட' என்கிறார் அடிகளார். பிரான் எனப்படுபவன் நாம, ரூபம் அற்று, குணங்குறி கடந்தவனாய் உள்ளான். அப்படியானால் எதற்கும் எட்டாது நிற்கும் அவனோடு கடவுட்பித்துக் கொண்டவர்கள் எவ்வாறு இணையமுடியும்? குணங்குறி கடந்த அப்பொருள் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றது. பருவுடலோடு, பொறி புலன்களோடு, அந்தக்கரணங்களோடு வாழும் ஒருவன் எந்த அளவு கடவுட்பித்துக் கொண்டாலும் குணங்குறி கடந்த அப்பொருளைச் சென்று பொருந்துதல் இயலாத காரியம். அப்படியானால் இதற்கு வழி என்ன? அனுபவத்தால் இதனை உணர்ந்தவர்கள்மட்டுமே இந்த ரகசியத்தை உணரமுடியும். குணங்குறி கடந்த பொருள் எவ்வளவு உயர்ந்திருப்பினும் உயிர்கள்மாட்டு அப் பொருளுக்குள்ள கருணை, கடல் போன்று அகன்றும் விரிந்தும் ஆழ்ந்தும் இருக்கின்றது. அப்பொருள் உயர்ந்துள்ளது எனினும் அதன் கருணை கீழ்நோக்கிப் பாய்தலின் இந்த இறையனுபவப் பித்தர்கள் அக்கருணையோடு பொருந்துகின்றனர். பித்து, எம்பிரானோடு சென்று பொருந்த முடியாது என்று ஐயுறுவார்க்கு, தம் அனுபவத்தால் கண்ட விடை யைக் கூறப்புகுந்த அடிகளார், ‘அத்தன் கருணையோடு பொருந்த (ஆட) என்கிறார். சுருங்கக் கூறுமிடத்து சித்தம் சிவனொடு இணைதல் (ஆட ஆட) ஒரு நிலை; செங்கயற் கண் பனி துளித்தல் அதன் வெளிப்பாடு.