பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. கோயில் திருப்பதிகம் (அதுபோக இலக்கணம்) கோயில் மூத்த திருப்பதிகத்தில் எல்லாப் பாடல்களிலும் கோயிலைப்பற்றிக் குறிப்பு வருவதால் கோயில் மூத்த திருப்பதிகம் என்ற பெயர் ஒரளவு பொருத்தமாக அமைந்து விட்டது. ஆனால், இப்பதிகத்திற்குக் கோயில் திருப்பதிகம் என்று பெயர் தருதல் எந்த விதத்திலும் பொருந்துமாறு இல்லை. ஒரு சிலர் இந்தத் தலைப்பை ஆதரிப்பதற்காகவே கோயில் என்ற சொல் திருப்பெருந்துறையையே குறிக்கும் என்றும் கூறியுள்ளனர். பின்வரும் பத்துப் பாடல்களிலும் திருப்பெருந்துறையே பேசப்பெறுகின்றது. திருப்பெருந்துறைக்கும் தில்லைக்கும் ஏதோ ஒரு வகைத் தொடர்பு அடிகளார் வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இருந்துள்ளது என்பதை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். திருப்பெருந்துறையைப்பற்றிப் பாடப்பெற்ற இந்தப் பத்துப் பாடல்களும் ஏறத்தாழச் சென்ற பதிக முறையையே பின்பற்றி அமைந்துள்ளன. இங்கும், 'மாறி நின்று என்று தொடங்கும் முதல்பாடல் தத்துவ ரீதியாகவே இறையிலக் கணத்தைப் பேசத் தொடங்குகிறது. சென்ற பதிகத்தைப்போலவே இப்பதிகத்திலும் முதல் பாடலில் தொடங்கிய ஆராய்ச்சி அத்தோடு நின்றுவிட, உணர்ச்சிப் பெருக்கை வெளியிடும் பாடல்கள் அடுத்து வெளிவருகின்றன.