பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில் திருப்பதிகம் 307 இருள் உள்ள இடத்தில் ஒளியும் இருப்பதில்லை. அப்படியிருந்தும் இந்த முரண்டாட்டினிடையே முழுமுதலைக் கண்ட பெருமை சைவம், வைணவம் என்ற இரண்டிற்குமே உரியதாகும். திணிந்த இருளில் ஒளி இருப்பவனே என்று அடிகளார் பாடுவது முரண்பாட்டில் முழுமுதலைக் காணும் ஒரு வழியேயாகும். உலகில் உள்ள எல்லாப் பொருட்களுக்கும் முக்குணங்கள் உண்டு. ஒருவர் இன்பத்தை அனுபவிக்கிறார் என்றால் அது சத்துவ, ராஜஸ், தாமஸம் ஆகிய முக்குணங்களிலும் ஏதாவது ஒன்றைப் பற்றியே நிற்கும். பிறருக்கு எவ்விதத் துன்பமும் நேராமல், தன் செயலால், எண்ணத்தால், பேச்சால் இன்பம் அடைகிறவர்கள்கூட சத்துவ குணத்தின் அடிப்படையில் அந்த இன்பத்தை அடைகிறார்கள் என்று சொல்வதில் தவறில்லை. ஆனால் சத்துவ அடிப்படையில் தோன்றும் இன்பம்கூட எப்போதும் நிலையானது என்று கூறுவதற்கில்லை. காரணம், உயிர்களைப் பொறுத்தவரை இம்முக் குணங்களும், வண்டிச் சக்கரம்போல் மாறி மாறி வரத்தான் செய்யும். இறையனுபவ இன்பம் இப்படி மாறி மாறி வரும் இயல்பு உடையதன்று; மேலும் நிலையானது என்பதை அறிவிக்கவே குணங்கள் தாம் இலா இன்பமே என்கிறார் அடிகளார். . 392. குறைவு இலா நிறைவே கோது இலா அமுதே ஈறு இலாக் கொழும் சுடர்க் குன்றே மறையும் ஆய் மறையின் பொருளும் ஆய் வந்து என் மனத் திடை மன்னிய மன்னே சிறை பெறா நீர் போல் சிந்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே இறைவனே நீ என் உடல் இடம் கொண்டாய் இனி உன்னை என் இரக்கேனே 5