பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 = திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 குறைவிலாநிறைவே-என்றும் எங்கும் பரிபூரணமாயிருப்பவனே. கோது இலா அமுதே-நஞ்சொடுபிறத்தலும் உண்டார்க்கு உண்மை ஞானம் விளங்காமையுமாகிய குற்றமற்ற அமுதமே. மறை- வேதம். மன்னிய-நிலைபெற்ற. மன்-அரசன். சிறை-கரை. இப்பாடலில் வரும் 'மறையுமாய் மறையின் பொருளுமாய் என்ற தொடர், வேதத்தில் வரும் சொல்லையும் அது குறிக்கும் பொருளையும் குறிப்பதாகும். பொதுவாக மறை என்பது ஒசையால் சிறப்புப் பெறு வதாகும். வேதத்தை அத்யயனம் செய்பவர்கள் பலர் கூடி, சொற்களைப் பிரித்துக்கொண்டு ஒரு கூட்டத்தார் ஒரு தொகுதிச் சொல்லைக் கூறி முடிக்கும்போது, அந்த ஒசை அடங்குவதற்கு முன்னர், அடுத்த கூட்டத்தார் மேலே சொல்லத் தொடங்குவர். எனவே அது, அலைமேலே எழுவதும் கீழே விழுவதும் மாறி மாறி நடப்பதுபோல், ஓர் ஒலி முத்தாய்ப்பையும் அடுத்து இறங்கி ஏறிவரும் அடுத்த முத்தாய்ப்பையும், பெற்றுவருவதாகும். இதனை நன்கு உணர்ந்த நாவரசப்பெருமான் 'ஒதிய ஞானமும் ஞானப்பொருளும் (திருமுறை: 4:92-17) என்று தொடங்கும் பாடலில் ஒலி சிறந்த வேதம்’ என்று கூறியிருப்பது இங்கு நோக்கத்தக்கது. மறை என்பது அடிகளார் கூறினாரேனும் அது ஒலிசிறந்த சொல்லையே குறிப்பதாகும். அடுத்து நிற்பது ‘மறையின் பொருளுமாய்” என்பதாகும். மறை என்பது சொல்லைக்குறிப்பது என்று கண்டோமாதலின், மறையின் பொருள் என்பது அச் சொல் குறிக்கும் பொருளைக் குறிப்பதாகும். மனத்திடை பரம்பொருள் வந்து நிலை பெறும்பொழுது சொல்லாகவும் சொல்குறித்த பொருளாகவும் வந்து தங்குகிறது என்பதைக் குறித்தவாறாயிற்று. 'சொல்லும் பொருளுமாய் நிற்கும் உமாகாந்தனை வணங்குகிறேன் என்ற கடவுள் வாழ்த்துப் பாடலுடன்,