பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 இப்பாடலின் நான்காவது அடி ஒரு வளர்ச்சியடைந்த மன நிலையைக் குறிப்பதாகும். எத்துணை சாத்திரம் பேசினாலும் தேகப்பிரக்ஞை என்று சொல்லப்படும் உடல்நினைவை மறப்பது இயலாத காரியம். உடல்நினைவு இருக்கின்றவரையில் அதனால் தோன்றும் உறவுகள் இருந்தே தீரும். தேகப்பிரக்ஞை அற்ற மகான்கள்மட்டுமே யார் எனக்கு உறவு என்று பேசமுடியும். உடலுடன் வாழ்பவர்கள் ஆயினும் இந்த உடம்பை இடைப்பிறவரலாக நினைப்பவர்கள் ஆதலின் உடம்புக்குரிய உறவைத் தங்கள் உறவாக ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவேதான் யார் எனக்கு உறவு என்று கேட்கிறார்கள். உறவு என்பது ஒருவரும் இல்லாதபொழுது அதன் மறுதலையாகிய அயலார் என்பதும் இல்லை அல்லவா? இவர்களைப் பொறுத்தமட்டில் எல்லா உயிர்களையும் இறைவன் படைப்பு என்று கருதுகிறார்களே தவிர தங்கள் உறவு அல்லது அயல் என்று கருதுவதில்லை. உடல் பற்றும், உடல் நினைவும் நீங்கிய, அடிகளார் போன்ற மகான்களே இறையனுபவம் ஆகிய ஆனந்தத்தை முழுமையாக அனுபவிக்க முடியும், அதனை அனுபவிக்கும் போதுகூட அது தம்முடைய முயற்சியால் வந்தது என்று இவர்கள் நினைப்பதில்லை. எனவேதான், ஆனந்தம் ஆக்கும்’ என்கிறார். ஆக்கும் என்ற சொல்லைப் பயன்படுத்தியதால், இந்த ஆனந்தத்தைத் தந்தவர் இறைவனே என்ற கருத்தையும் பெறவைக்கிறார். அடுத்து உள்ளது என் சோதி' என்பதாகும். சோதி என்ற பெயர் இறைவனுக்கு தரப்பெற்றிருப்பது பொருத்த மானதே ஆகும். ஆனால் எல்லாவற்றையும் படைத்து அனைத்திலும் ஊடுருவியும் அவற்றிலிருந்து தனித்தும் உள்ள சோதிவடிவான இறைவன், யாவர்க்கும், யாவைக்கும் பொதுவானவன் அல்லனோ?