பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 பந்தம்-மலக் கட்டு. தீது இலா நன்மை-என்றும் ஒரு படித்தாகத் தீதே இல்லாத நன்மை. சொல்லாலும், கருத்தாலும் சுட்டப்படமுடியாத ஒரு பொருளை அரிதின் முயன்று சுட்ட முற்படுகின்றார் அடிகளார். உருவம், வடிவம் என்ற இரண்டு சொற்களை யும் வேறுபடுத்தி, எல்லை அமைத்துக் காண்டல் வேண்டும். உருவு என்பது இன்னதென்று கண்டுகொள்ள முடியாத, குறிப்பிட்டுச் சொல்லமுடியாத ஒரு பருவடிவைக் குறிப்பதாகும். எவ்வகை உறுப்பும் வேறுபடுத்திக் கண்டு கொள்ள முடியாதபடி இருக்கும் ஒன்றையே, உருவம் என்று சொல்லுகிறோம். சோதியாய்த் தோன்றும் உருவமே என்றால், சோதி என்பதை இன்னதென்று குறிப்பிட்டு அதற்கொரு வடிவைக் கற்பித்துக் காணுதல் இயலாத காரியம். ஆதலால், உருவம் என்ற சொல்லை அதனோடு சேர்த்துச் சோதியாய்த் தோன்றும் உருவமே' என்றார். 'அருவாம் ஒருவனே' என்பது அடுத்து நிற்கும் தொடராகும். அருவம் என்பது உருவோ, வடிவோ இல்லாத ஒன்றையே குறிப்பதாகும். அப்படிப்பட்ட ஒன்றை ஒருவனே என்று சொல்லுவது எவ்வாறு பொருந்தும்? அருவாகவும், சோதியாகவும், உருவாகவும், வடிவாகவும் இருக்கும் ஒன்றை நன்கறிந்துகொண்டவர் அடிகளார். அது பெண்ணன்று, ஆணன்று, அலியுமன்று என்பதையும் நன்கறிந்தவர் அடிகளார். அப்படியிருக்க ஒருவனே என்று ஆண்பாலுக்குரிய 'அன்' விகுதி கொடுத்துப் பேசுவது எவ்வாறு இயலும்? இவற்றிற்கெல்லாம் விடை கான வேண்டுமாயின் திருப்பெருந்துறை நிகழ்ச்சியை மறுபடியும் நம் நினைவுக்குக் கொண்டுவர வேண்டும்.