பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 சுட்டப்பட்ட ஒன்று நடுவாக மாறிவிடுகின்றது. காலத் தத்துவமும் இதுபோலத்தான். எனவே, பருப்பொருளாகிய பிரபஞ்சத்திற்கும், கருத்துப் பொருளாகிய காலத்திற்கும் ஆதி, நடு, அந்தம் என்ற எதுவு மில்லை. அதனாலேயே விஞ்ஞானம் அறிந்த அடிகளார் சொல்லுதற்கரிய' என்ற விளக்கத்தைத் தருகிறார். இந்த ஒன்றரை அடிகளில் ஈடு இணையற்ற முறையில் மூலப்பொருளுக்கு இலக்கணம் வகுத்த அடிகளார், திடீரென்று அந்தப் பொருளின் எளிவந்த தன்மைக்கு (செளலப்பியம்), இலக்கணம் வகுக்கும் முறையில் (நம்) 'பந்தம் அறுக்கும் ஆனந்தமாகடலே’ என்கிறார். அந்த மூலப்பொருளுக்கு உருவும், வடிவும் என்ற எதுவும் இல்லையென்றாலும், நம்முடைய விருப்பத்திற் கேற்ப ஒரு வடிவைக் கற்பிக்கலாம் அல்லவா? அந்த முறையில்தான் திருவருட்குன்றே என்கிறார் அடிகளார். திருவருள் மலை என்று முன்னர்ப் பேசிய அடிகளார், இப்பொழுது ‘குன்று என்று கூறவேண்டிய காரணம் என்ன? மலை என்று கூறினால், அளக்கலாகாப் பருமை உடையதாதலால் அதில் நம் போன்றவர்கள் ஏறிப் பயனடைதல் இயலாதென்று கருதி, அம்முயற்சியையே விட்டுவிடுவோம். நம் இயல்பை அறிந்த அடிகளார், நம்முடைய அச்சத்தைப் போக்குவான் வேண்டி, மலை என்ற சொல்லுக்குப் பதிலாக மலையிலும் சிறியதாகிய குன்று என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். திருவருளைக் குன்று என்று உருவகித்தது சரி. தீதிலா நன்மை என்ற அடைமொழிகள் எதற்கு? நன்மை என்ற சொல் காதில் விழுந்தவுடன் அதன் மறுதலையாய தீமை என்ற சொல் மனத்திலே தோன்றத்தான் செய்யும். சுகம்