பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 அதேபோலத் திருப்பெருந்துறையில் ஆட்கொள்ளப் பெற்றதும் 'கோலம் ஆர்தரு பொதுவினில் வருக என்று பணிக்கப்பெற்றதும் அவர் ஒருவரைத்தான் என்றாலும், தாம் பெற்ற ஆனந்தம் காரணமாக, அனைவருமே அந்த ஆனந்தத்தைப் பெற்றுள்ளார்கள் என்று அடிகளார் நினைப் பதில் தவறு ஒன்றும் இல்லை. அதன் பயனாகவே ‘என்தன்னை' என்று தன்மை ஒருமையில் கூறவேண்டிய 'நம் தம்மை’ என்ற தன்மைப் பன்மை வாய்பாட்டில் கூறுகிறார். எங்கோ சென்றுகொண்டிருந்த தம்மை இழுத்து ஆட்கொண்டதும், பணிகொண்டதும் எப்பிறவியிலும் யாருக்கும் கிடைத்தற்கு அரிய பெரும்பேறு ஆகும். அந்தப் பேற்றை நன்றி உணர்ச்சி பொங்கவும், அதன் பயனாக உதடுகள் துடிக்கவும் வாயை நன்றாகத் திறந்து உரக்கப் பாடவேண்டும் என்ற கருத்தை இரண்டு அடிகளில் கூறுகிறார். அத்தோடு நில்லாமல், அந்த அனுபவத்தைத் தந்தவர் தம் எதிரே இல்லாமையால், பாடிக்கொண்டே தேடுங்கள்’ என்கிறார். நம்தம்மை என்று பன்மையில் கூறியதற்கு ஏற்ப எதிரே உள்ளவர்களையும் உளப்படுத்தி, 'நீங்களும் பாடிக் கொண்டே தேடுங்கள்’ என்கிறார். திருப்பெருந்துறையில் தமக்குக் கிடைத்த இறையனு பவம் அனைவருக்கும் கிடைத்துள்ளது என்று கருதினார். ஆதலின், தேடிச் சித்தம் களிப்பத் திகைத்துத் தேறி ஆடு மின் என்கிறார். செய்யுள் ஆதலின் சொற்கள் முன்பின்னாக அமைந்துள்ளன. பின்வரு முறையில் கொண்டு கூட்டுச் செய்துகொண்டால் பொருள் எளிதில் விளங்கும். தேடித் தேடித் திகைத்து, தேறிச் சித்தங் களிகூர ஆடுமின் என்று கொள்வது நலம். தேடாமல் இருக்கும் பொழுது தமக்கு எளிதில் கிடைத்த பொருள் இப்பொழுது