பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில் திருப்பதிகம் 321 இத்தகைய ஒரு வாணிகம் இப்பாடலில் பேசப் பெறுகிறது. அடிகளாரின் உடல், பொருள், ஆவி அனைத்தையும் பெற்றுக்கொண்டு இறைவன், திருவருள் என்ற பெயரில் தன்னையே அவருக்குத் தந்துவிட்டான். இந்தப் பண்டமாற்று அல்லது பொருள்மாற்று நடைபெற்ற பிறகு, அடிகளார் இறைவனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார். ‘ஐயனே! என்னை முழுவதுமாகப் பெற்றுக் கொண்டு, உன்னை முழுவதுமாகத் தந்தாயே, இந்த வியாபாரத்தில் யார் கெட்டிக்காரர் என்பது உனக்குத் தெரியுமா? பெருவாணிகனாகிய உனக்கு இந்தச் சிறு வியாபாரத்தின் பயனைப்பற்றிச் சிந்திக்க நேரமிருக்காது. இப்பொழுது நான் சொல்லுகிறேன், நீ என்னுள் புகுந்ததால் அந்தம் ஒன்றில்லா முடிவில்லாத) ஆனந்தத்தை யான் அடைந்தேன் பாவம்! என்னைப் பெற்றுக் கொண்டதால் உனக்கு என்ன பயன் விளைந்தது' என்று கூறுவதன்மூலம் அடிகளார் ஒரு மாபெரும் தத்துவத்தை விளக்குகிறார். அதனைப் புரிந்துகொள்ள ஒரு உதாரணம் தேவை. - ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலமுடைய ஒருவன் ஒரு ஏழை வைத்திருக்கும் கால் ஏக்கர் நிலத்தை அந்த ஏழை விரும்பும் அளவுக்குப் பொருள் கொடுத்துப் பெற்றுக் கொண்டான். ஆயிரம் ஏக்கர்காரனுக்கு இந்தக் கால் ஏக்கரால் எவ்வித லாபமும் இல்லை. ஆனால், அதனை விற்ற ஏழைக்குப் பெற்ற பொருளால் அவன் விரும்பிய வாழ்வு கிடைத்தது. பிரபஞ்சத்தில் உள்ள கோடிக்கணக்கான உயிர்களைப் படைத்து அவற்றை வாழுமாறு திருவருள் செய்பவன் இறைவன். உடல், பொருள், ஆவி என்ற கால் ஏக்கர் நிலத்தை விற்ற ஏழைதான் அடிகளார். அந்தமொன்றில்லா ஆனந்தத்தை அவர் பெற்றது உண்மைதான்.