பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை இரட்டை மணிமாலை, மும்மணிக்கோவை போன்ற சிறு பிரபந்தங்கள் காரைக்கால் அம்மையார் காலத்திலிருந்தே மூன்றாம் நூற்றாண்டு) இருந்துவந்தன. எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த சேரமான் பெருமான் நாயனார் திருக்கயிலாய ஞானஉலா என்ற பெயரில் தமிழ் இலக்கியத்தில் அதுவரை காணப்படாத 'உலா என்ற புதுவகைப் பிரபந்தத்தைத் தோற்றுவித்தார். அடிகளார் காலத்திற்கு ஐந்து நூற்றாண்டுகள் முன்னரும் அவருக்கு நான்கு நூற்றாண்டுகள் பின்னரும் உள்ள இக்காலம் தமிழ்ப் பக்தி இலக்கியத்தின் பொற்காலமாகும். சிலப்பதிகாரம் கானல் வரியில் இடம்பெறும் இசைப்பாடல்கள் உருவும், வடிவும் மாறினாலும் இசைப்பாடல் தன்மையை இழக்காமல் மூவர் முதலிகளின் தேவாரப் பாடல்களிலும், நம்மாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களின் திருப்பாடல்களிலும் இடம்பெற்றன. இந்த இசைப்பாடல்கள் நாளாவட்டத்தில் மெள்ள மெள்ள இசைப்பகுதியை விட்டுவிட்டு விருத்தப் பாக்களாக நின்றுவிட்டன. தோலாமொழித்தேவரின் சூளாமணி, கம்பனின் இராம காதை, திருத்தக்கதேவரின் சிந்தாமணி, சேக்கிழாரின் பெரியபுராணம் ஆகியவை விருத்தப் பாடல்கள் ஓகோ என்று வளர்ந்தமைக்கு எடுத்துக் காட்டுகளாகும். திருப்பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்தோள்நோக்கம் என்ற தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. பின்னர் வரும் கோயில் திருப்பதிகம் போலப் பிற்காலத்தார் தம் விருப்பம்போல் கொடுத்த தலைப்புகள் அல்ல இவை.