பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 பக்தி நூல்களுள் திருவாசகம் தனித்தன்மை வாய்ந்தது. அதிலுள்ள பாடல்களும் தனித்தன்மை வாய்ந்தவை. ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களைப் பெற்றுள்ள தமிழ் இலக்கியத்தில் திருவாசகம் போன்ற ஒரு நூல் எதுவும் இல்லை. இறையனுபவத்தில் ஈடுபட்டு இறைவனைப் பாடிய பாடல்கள் பல்லாயிரம் உண்டேனும், அந்த அனுபவம் எத்தகையது, எவ்வாறிருந்தது என்று கூறும் பாடல்கள் திருவாசகம் ஒன்றில்தான் உண்டு. தாம் பெற்ற அனுபவத்தைப் புற நிலையில் நின்று மறுபடியும் காணும் வாய்ப்பை அடிகளாருக்கு இறைவன் அருளினான். அதன் பயனாகவே திருவாசகம் தோன்றிற்று என்று முன்னரும் கூறியுள்ளோம். இதனோடு ஒப்புமை சொல்லக்கூடிய நூல் வேறு எதுவும் இல்லாதபோது பழைய மரபுபற்றியே இப்பாடல் களுக்குப் பொருள் கூறவேண்டும் என்ற இன்றியமைாமை இல்லை. உதாரணமாக, திருக்கோத்தும்பியை எடுத்துக் கொள்ளலாம். இருபது பாடல்களைக் (215-234) கொண்ட இப்பகுதியில் இராஜ வண்டு எனக் கூறப்பெறும் கோத்தும்பியை விளித்து அடிகளார் பல செய்திகளைக் கூறுகின்றார். இந்த இருபது பாடல்களில் வண்டைத் தூதாக அனுப்பும் செய்தி 227, 233 ஆகிய இரு பாடல்களில் மட்டுமே இடம் பெறுகிறது. பழைய மரபைப் பின்பற்றி எல்லாவற்றையும் தூது என்று சொல்வது பொருந்து மாறில்லை. அப்படியானால் வண்டையும் குயிலையும் விளித்துப் பாடவேண்டிய இன்றியமையாமை என்ன என்ற வினாவை மனத்தில் வைத்துக்கொண்டு திருக்கோத்தும்பியின் இருபது பாடல்களையும் பார்க்கும்போது சில சிந்தனைகள் தோன்றுகின்றன.