பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 என்று பாடுகிறார். நாம ரூபம் கடந்த அந்தத் திருவடி, தேவை ஏற்படும்போது வடிவத்தை எடுத்துக்கொள்ளும்; அடிகளாருக்கு அப்படித்தான் செய்தது. திருவடி, காட்சிக்கு அப்பாற்பட்டது என்றால், எவ்வாறு அதனை அறிவது? பொறி, புலன்களுக்கும், அறிவுக்கும், கற்பனைக்கும் அப்பாற்பட்டு நிற்குமொன்றைக் காணவோ அறியவோ கற்பனை செய்துகொள்ளவோ இயலாது. ஒரே ஒரு வழியினால்தான் அதனைத் தெரிந்துகொள்ள முடியும். அந்த ஒரு வழி உணர்வு வழியாகும். உணர்வினால் உணர்வதற்கு எங்கும் செல்லவேண்டிய தேவையில்லை; இருந்த இடத்தில் இருந்தே உணரலாம். இந்த நுணுக்கத்தை, தம் அகங்காரம் காரணமாக அறிந்துகொள்ளாத மால் தேவையில்லாத இரண்டு செயல்களைச் செய்தார். ஒன்று, வராக அவதாரம் எடுத்தது; இரண்டு, பூமியைத் தோண்டிக்கொண்டு தேடிச்சென்றது. இவை இரண்டு செயல்களையும் செய்யாமல், இருந்த இடத்தில் இருந்துகொண்டே அவன் திருவடிகளைத் தம்முடைய உள்ளத்து உணர்ச்சியுள் கொண்டுவர நினைத்திருந்தால் வெற்றியும் பெற்றிருக்கலாம். சித்தத்துள் தோன்றும் உணர்வின்மூலம் உணரவேண்டிய ஒன்றை வேறொரு வடிவெடுத்துப் புறத்தே தேடிச் சென்றமையின் உணரமுடியாது போயிற்று என்பதையே 'சென்று உணராத் திருவடி என்றார். மிகப் பழைய சங்க காலத்தில்கூட இறைவன் நாமரூபம் கடந்தவன் என்ற கருத்துத் தமிழர்களிடையே பரவியிருந்தது. அப்படியிருந்தும்கூட அவரவர்கள் விருப்பத்திற்கேற்ப அப்பொருளுக்குப் பல பெயர்களைத் தந்தனர். இதனையே,