பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 வளர்ச்சியையும், ஆழத்தையும், விரிவையும் நம் அறிவு பெறுகிறது. இந்த மாற்றங்கள் பிறருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், அறிவு வளர்ச்சிபெற்றவர் பழைய பொருள்களைக் காணும்பொழுது, அப்பார்வையில் ஒரு மாற்றம் ஏற்பட்டு அதன் பயனாகப் பழைய பொருள்கள் புதிய வடிவுடன் காட்சி நல்குகின்றன. அவருள் நிகழ்ந்த இம்மாற்றம் அவருக்குமட்டுந்தான் தெரியுமே தவிரப் புறத்தார்க்குத் தெரியாது. திருப்பெருந்துறை நிகழ்ச்சியைக் கண்டவர் பலர். அந்நிகழ்ச்சிக்குப் பிறகு அவருடைய பதவி, உடை அலங்காரம் ஆகியவை துறக்கப்பட்டன; அவருள் நிகழ்ந்த மாற்றத்தைப் பிறர் அறிய முடியவில்லை. இறையுணர்வு பெற்று இறை அனுபவத்தில் மூழ்குபவர்களின் நிலையும் இதுதான். எந்த நூலை எப்பொழுது படித்தார் என்பதைப் புறத்தார் அறிந்துகொள்வதைப் போல அடிகளாருக்கு எப்பொழுது எந்த இடத்தில் எந்தச் சூழ்நிலையில் இந்த அனுபவம் கிடைத்தது என்பதைமட்டும் புறத்தார் அறிவர். இதன் பயனாக அடிகளார் பெற்ற மாற்றத்தை அவரைத் தவிர வேறு யாரும் அறியமர்ட்டார்கள். அடிகளார் போன்ற அருளாளர்களின் உள் நிகழ்ந்த மாற்றம் என்ன என்பதை அவர்களாகக் கூறினாலொழிய நம் போன்றவர்கள் அறிய வேறு. வழியில்லை. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக மணிவாசகரைப்போல் இறையனுபவத்தில் மூழ்கித் திளைத்த மகான்கள் பலருண்டு. ஆனால், அவர்கள் யாரும் தம்முள் நிகழ்ந்த மாற்றத்தை அடிகளாரைப் போல் நம் போன்றவர்களும் அறியும்படி விரிவாக வெளியிடவில்லை. உலகத்தில் ஒரு பெரியவரின், ஆன்மிகத்தில் உயர்ந்த மகானின், அருள் நமக்குக் கிட்டினால் பல வளர்ச்சிகள் நம்முள் ஏற்படும். அடங்கி, மடங்கியிருந்த நம் அறிவு விரிந்து வெளிப்படும். நம்முடைய பொறி புலன்கள்,