பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 உள்புகுந்த குருநாதருள் முற்றிலுமாகக் கரைந்து மறைத்துவிட்டது. ஆட்கொள்வதற்குமுன் திருவாதவூரர் என்னும் மனிதரின் அயலே ஆளும் செயல் நடை பெற்றவுடன் அந்தத் திருவாதவூரர் என்ற மனிதர், அவர் அயலே இருந்த குருநாதர் என்று இரண்டாக நிலை மாறி இப்பொழுது குருநாதருள் வாதவூரர் ஐக்கியமாகிவிடுகிறார். இதனையே அயல்மாண்டு என்று சொல்கிறார். அதாவது தம்பினும் வேறாக அயலாக குருநாதர் இருந்த நிலை மாறிவிட்டது என்கிறார். அடுத்து அருவினைச் சுற்றமும் மாண்டு என்கிறார். திருவாதவூரர் என்ற தனிமனிதர் பெரும் பதவியில் இருக்கின்றபோது, சுற்றத்தார் என்று சொல்லிக்கொள்ளும் கூட்டம் நிறைந்திருந்தது. மணிவாசகராக மாறியபோது சுற்றமென்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. "அவனியின்மேல் மயல்மாண்டு’ என்பதும் உலகத்தின் மேற்கொண்ட ஈடுபாடு செயலிழந்தது என்பதாம். 'மற்றுள்ள வாசகம்’ என்பது இறைவனை அல்லாத பிறவற்றைக் குறித்துப் பேசும் பேச்சு என்பதாம். ‘என்னுடைய செயல்’ என்பது உடலால் செய்யப்படும் செயல்கள் என்பதாம். ஒவ்வொன்றாகக் கூறி, மாண்டு என்று குறித்தாரேனும் இவை ஒவ்வொன்றும் தனித்தனியே மாளவில்லை. திருப்பெருந்துறையில் குருநாதரின் திருவடி பட்டவுடன் வாதவூரரிலிருந்த நான்' என்னும் தற்போதம் அழிந்தது. அது அழியவே ஏனைய அனைத்தும் மாண்டன. இவ்வாறு விரித்துக் கூறியதன் நோக்கம் நம் போன்றவர்கள் அதனை அறிந்துகொள்ள வேண்டும் என்ற காரணத்தாலேயாம், "மாலே, பிரமனே' எனத் துவங்கும் பாடலில் (248, மால், பிரமன், தேவர்கள் என்பவர்களோடு, அஃறிணைப் பொருளாகிய நூல்களையும் உடன் சேர்த்து