பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 - திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 295ஆம் பாடலின் முதலிரண்டு அடிகளையும், வாய் விட்டுப் படித்தால், இந்த மூன்று நிகழ்ச்சிகளும் ஒன்றுக் கொன்று தொடர்பில்லாதவை போன்று தோன்றும். பூசல் விளைந்தது அதன் விளைவாக வில் வளைந்தது' என்றால், ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகக் காணலாம். இதனை இப்படியே கூறவேண்டுமென அடிகளார் நினைத்திருந்தால் பாடலை மாற்றி விளைந்தது பூசல்; வளைந்தது வில்லு' என்று பாடியிருக்கலாம். அப்படிப் பாடியிருந்தால் கலித்தாழிசை இலக்கணம் கெட்டுவிடாது. மாபெரும் கவிஞராகிய அடிகளார் எதோ ஒரு காரணத்திற்காகவே வளைந்தது வில்’ என்று முதலில் தொடங்குகிறார். மாமேரு மலையை வில்லாக எடுத்துச் சென்றார் என்பதுதான் புராணக்கதை. போர் தொடங்கு கின்ற வரையில் வில் நிமிர்ந்தே நிற்கும். போர் தொடங்கும் பொழுதுதான் அதனை வளைத்து நாணேற்றி வில்லுக்குரிய தொழிலைச் செய்ய அதனைத் தயார்படுத்துவர். வாயுபுராணத்தில் சொல்லப்பெற்ற கதை வருமாறு: விஸ்வகர்மா என்னும் தேவதச்சன் பொன்னாலாகிய ஒரு இரதத்தைச் செய்து சிவனுக்குத் தந்தான். நான்முகன் சாரதியாக அமர்ந்தான். அதில் ஏறிய சிவபிரான் பாசுபதம் என்ற அம்பைச் செலுத்தித் திரிபுரங்கள் மூன்றையும் ஒரே நேரத்தில் அழித்தான் என்பதாகும். இந்தக் கதையைக்கூட அடிகளார் முழுவதுமாக எடுத்துக்கொள்ளவில்லை, சாதாரண தேவர்களைப்போலச் சிவபெருமானும் ஒரு இரதத்தில் ஏறி அம்பைச் செலுத்தித்தான் திரிபுரத்தை அழித்தான் என்று கூறுவது, சிவபெருமானின் இறையாண்மைக்கு ஏற்றதன்று. தான் செய்த தேரில்தான் சிவபெருமான் ஏறினான் என்பதால் விஸ்வகர்மன் தருக்குக் கொள்ளவும், தான் சாரதியாக அமர்ந்ததால்தான் திரிபுரம் எரிக்கப்பட்டது என்று பிரமன்