பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 திருத்தோணோக்கத்தில் மூன்று புதிய சிந்தனைகளைப் பாடுகின்றார். கண்ணப்பர் வரலாற்றில் அடிகளார் அதிகம் ஈடுபட்டவர் என்பதை முன்னரும் குறித்துள்ளோம். படைத்தல் தொழிலைச் செய்வதோடு, கல்வி, அறிவு என்பவற்றிற்குத் தலைவனாகவும் உள்ள நான்முகனும் காணமுடியாத ஒருபொருளைக் கல்வி, அறிவு, குடிப்பிறப்பு என்ற எதுவுமில்லாத ஒருவர், ஆறே நாளில் கண்டார். கண்டதோடுமட்டுமன்றி நாம, ரூபம் கடந்த அப்பொருள் தனக்கொரு வடிவைக் கற்பித்துக் கொண்டு, திண்ணனார் கையைப் பற்றிக்கொண்டு நில்லு கண்ணப்ப' என்று சொல்லுமளவிற்கு ஆறே நாளில் (வளர்ச்சி அடைந்தார் என்ற வரலாற்றை இடையே கூறுவதன் மூலம்) நான்முகன் முதலானவர்களோடு கண்ணப்பரையும் வைத்து எண்ணுமாறு செய்கிறார் அடிகளார். அறிவாலும், செல்வத்தாலும் காணமுடியாத ஒன்று, அன்புக்குக் கட்டுப்பட்டு, அந்த அன்புடையார் கையையும் பற்றுகின்றது என்பதுவே கண்ணப்பர் வரலாற்றின் சிறப்பாகும். 'பொருள்பற்றிச் செய்கின்ற பூசனைகள்’ (திருவாச:317) என்று கூறப்படும் இப்பூசனையில் பொருள்கள் முதலிடம் பெற்றன. திண்ணனார் பூசை அன்புபற்றிச் செய்யப் பெற்றது. ஆதலின், ஆகமத்தில் கூறப்பெற்ற பொருள்களுக்கு மாறாக, வேறு பொருள்கள் இடம்பெற்றன. இந்தப் பூசனை முழுவதும் அன்பால் நிறைந்திருந்தமையின் பயன் படுத்தப்பெற்ற பொருள்களாகிய வாய், உமிழ்நீர், இறைச்சி, காற்செருப்பு ஆகியவை இப்பூசனையின் இடம்பெற்றிருப் பினும், அவை தமக்குரிய இயல்பை இழந்து, அன்பின் பல்வேறு வெளிப்பாட்டு வடிவங்களாகவே அமைந்தன.