பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 அடிகளார் அறியும்படியாக நிகழ்ந்த நிகழ்ச்சி கூலியாள் வந்தியின் பிட்டை வாங்கி உண்டதாகும். அதைக் கூறவந்தவர், கோல வரைக் குடுமி வந்து குவலயத்துச் சால அமுதுண்டு’ (திருவாச 336) என்று பாடுகின்றார். வந்தி கொடுத்தது பிட்டுத்தானே? அதிலும் உதிர்ந்துபோன பிட்டுத்தானே? அதனை உண்டான் என்று கூறவந்த அடிகளார், 'அமுது உண்டு’ என்று கூறுவதன் நோக்க மென்ன? நஞ்சை உண்டு பழகியவனுக்குப் பிட்டு அமுதாவதில் வியப்பொன்றும் இல்லை. நஞ்சை உண்டபொழுது அதனை யாருக்கும் பங்கிடவில்லை; அவன் பங்கிட்டிருப்பினும் அதனை யாரும் வாங்கி உண்டிருக்க மாட்டார்கள். ஆனால், வந்தியின் பிட்டை இவன் ஊதி ஊதித் தின்பதைக் கண்டவர்கள், கையை நீட்டினார்கள். இந்த வள்ளலும் பங்கிட்டுக் கொடுத்தான். ஆகவேதான் 'அமுதுண்டு' என்று இங்கேயும், 'பிட்டமுது செய்தருளி' என்று பிறிதோர் இடத்திலேயும் (திருவாச. 290) அடிகளார் பாடுகின்றார். அன்னைப்பத்து அகத்துறை என்று எண்ணக்கூடிய முறையில் தலைவியின் காமம்பற்றி வருகின்ற பல பாடல்கள் பிற்காலத்தில் தோன்றின. திருஞானசம்பந்தர், 'என்னுள்ளம் கவர் கள்வன்’ (திருமுறை: 1-1-1 என்பதுபோன்ற முறையில் பல பாடல்கள் பாடியுள்ளார். நாவரசரும், 'வஞ்சித்து என் வளை கவர்ந்தான் (திருமுறை: 4-12-10) என்பது போன்ற முறையில் சில பாடல்கள் பாடியுள்ளார். சுந்தரர், “பறக்கும் எம் கிள்ளைகளாள், பாடும் எம் பூவைகாள்’ (திருமுறை: 7-32-2) என்பது போன்ற முறையில் சில பாடல்கள் பாடியுள்ளார். அதேபோன்று தான் அடிகளாரின் அன்னைப்பத்தும் அமைந்துள்ளது.