பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 385 (மிக நீண்டகாலம் வாழ்ந்தவரும் காழிப்பிள்ளை யாரின் உடன் வாழ்ந்தவரும் ஆகிய நாவரசர் பெருமான்) ஆறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலும், ஆளுடைய பிள்ளையார் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், சுந்தரர் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், அடிகளார் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் வாழ்ந்தவர் ஆவர். சங்க காலத்தில் பெருவழக்காக இருந்த அகத்துறைப் பாடல்கள் மானிடத் தலைவி, மானிடத் தலைவர் என்பவர்களை அடிப்படையாக வைத்தே தோன்றின. ஆனால், கி.பி. 6ஆம் 7ஆம் நூற்றாண்டுகளில் பெருவழக்கில் தோன்றிய தேவாரப் பாடல்கள், நம்மாழ்வாரின் திருவாய் மொழி போன்றவை ஒரு புதிய வழியைப் பின்பற்றின. இந்தப் பெருமக்கள் இறைவனைத் தலைவனாக வைத்துத் தங்களையே பெண்களாகப் பாவித்துக்கொண்டு பல பாடல்களை இயற்றினர். பழைய சங்ககால வழக்கில் மடல் ஊர்தல் என்பது ஆண்களுக்கு மட்டுமே உரிய ஒன்றாகும். ஆனால், பக்தி இயக்க காலத்தில் தங்களையே பெண்ணாகப் பாவித்துக் கொண்டும் இறைவன்மேல் தீராக் காதல் கொண்டும் பாடப்பெற்ற ஆழ்வார்களின் சில பாடல்கள், பழைய இலக்கணத்திற்கு முற்றிலும் மாறுபட்டுப் பெண் மடலூர்தலைப்பற்றிப் பாடுகின்றன. திருமங்கை ஆழ்வாரின் சிறிய திருமடல், பெரிய திருமடல் என்பவை தொல்காப்பிய இலக்கணத்திற்கு மாறுபட்டு வரும் தமிழிலக்கிய வளர்ச்சியின் புதிய போக்கை அறிவிப்பவை ஆகும். ஆழ்ந்து சிந்தித்தால் தொல்காப்பிய இலக்கணத்தின் சில பகுதிகள் பெருமாற்றங்களை அடைந்து, பக்தி இலக்கிய காலத்தில்