பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 ஏறத்தாழப் பழைய வடிவு மறைந்து புதிய வடிவு பெறலாயின என்றே கூறவேண்டும். தொல்காப்பியம் கடவுட் காதல்பற்றி ஒன்றிரண்டு இடங்களில் மேலோட்டமாகப் பேசியது உண்மைதான். அந்தச் சிறிய விதை, பக்தி இலக்கிய காலத்தில் பெருமரமாகி வளர்ந்து புதிய வடிவு எடுத்தது. அதன் பயனாகவே ஆண்களாகிய நால்வர், நம்மாழ்வார், திருமங்கை மன்னர் போன்றோர், தங்களைப் பெண்களாகப் பாவித்துக்கொண்டு இறைவன்மேல் தாம் கொண்ட காதலை வெளிப்படுத்தும் முறையில் பாடல்களை இயற்றினர். சில பகுதியில் தூது அனுப்புதல், காமம் மிக்க கழிபடர் கிளவி என்பவையும் இடம்பெற்றன. திருவாசகத்தின் அன்னைப் பத்திற்கு இந்த அடிப்படையில் பொருள்கான வேண்டுமே தவிர, தொல்காப்பியத்தில் வரும் சில சொற்களைக் கொண்டு இதற்குப் பொருள்காணுதல் பொருந்தாததாகும். அன்னை என்ற சொல் தொல்காப்பியம் முதல் ஐங்குறு நூறு வரை இடம்பெற்ற சொல்லாகும். பெரும்பாலான இடங்களில் இச்சொல் செவிலித் தாயையும், சில இடங்களில் நற்றாயையும் குறிக்கும். திருவாசகத்தின் அன்னைப் பத்தில் 'அன்னே என்னும் என்று வருவதால் தொல்காப்பிய அடிப்படையில் பலரும் பொருள் கூறியுள்ளனர். கிறிஸ்து பிறப்பதற்கு எட்டு, ஒன்பது நூற்றாண்டுகள் முற்பட்ட தொல்காப்பிய இலக்கணத்தைக் கிறிஸ்துவிற்குப் பின் ஏழு எட்டு நூற்றாண்டுகள் கழித்து வரும் பத்திப் பாடல்களுக்குச் சாத்திப் பொருள் காண்பது அவ்வளவு சரியாகப் படவில்லை,