பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 தேவாரம் முதலிய பாடல்களில் இந்த மூன்று நிலை தொடர்ந்து இருப்பதைக் காணமுடியும். ஆனால், திருவாசகத்தில் பாடப்படுபொருளும், பாடுபவரும் ஒன்றினுள் ஒன்று மறைய, பாடுபவர் பெறும் ஆனந்தம் ஒன்றே மிஞ்சுகிறது. பிறகு பாடுபவர், தம் அனுபவத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து, அந்த அனுபவத்தை நினைந்து பார்க்கையில் அந்த அனுபவத்தின் வெளிப்பாடாக வருவதே திருவாசகம் ஆகிறது. இந்த வரன்முறை திருவாசகம் ஒன்றிற்கே பெரும்பாலும் உரியதாகும். தேவாரம், பிரபந்தம் முதலிய வற்றுள் ஒருசில பகுதிகள் இந்த முறையில் அமைந்திருக்கலாமேனும் பெரும்பான்மையான பகுதிகள் முன்னர்க் கூறப்பெற்ற மூன்று நிலைகளுடன் அமைந்தவையே ஆகும். இவற்றைப் பாடியவர்கள் எல்லையற்ற பக்தியில் ஆழங்கால் பட்டாலும் தம்மை மறவாத நிலையில் தம் ஈடுபாட்டைப் பாடல்களாக வெளிப்படுத்தினர். இந்த முறையில் திருவாசகம் என்பது தேவாரம், பிரபந்தம் ஆகியவற்றோடு இணையாமல் தனித்துவமுடையதாகிறது. கைவிட்டுப் போன அனுபவம் மறுபடியும் தமக்கு வேண்டும் என்று விரும்புகிறார் அடிகளார். இப்பொழுது அனுபவத்திலிருந்து விடுபட்டு நிற்கும் நிலையாதலின், அனுபவத்தைத் தந்தவரை ஆற அமர நினைந்து பார்க்கிறார். முதலில் குருநாதர் வடிவாக இருந்தவர்தான் அனுபவத்தைத் தந்தார். பிறகு அந்த நிலை மாறி, அதே குருநாதர் இருந்த இடத்தில் உமையொருபாகர் தோன்றினார். இப்பொழுது அந்தக் காட்சியைக் கண்டு அதில் ஈடுபட்ட பிறகு, பல நாட்கள் ஆகிவிட்டன. ஓரிடத்தில் இருந்துகொண்டு தமக்கு இந்த அனுபவத்தைத் தந்த தலைவரைப்பற்றி மெள்ள மெள்ள நினைந்து பார்க்கிறார். பல்வேறு வடிவங்கள் வந்துவந்து போகின்றன.