பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 389 மனத்திரையில் காட்சிதந்து மறையும் ஒரு சில அப்படங்களுக்கு வடிவு கொடுக்கும் பகுதியே அன்னைப்பத்தாகும். - வேத மொழியராய், வெண்ணிற்றராய், செம்மேனியராய், நாதப்பறையினராய் இருந்தது முதல் படம்; அஞ்சனம் தீட்டிய கண்ணுக்குள் நின்று கருணைக் கடலாகக் காட்சி தந்தது இரண்டாவது படம்; நித்த மணாளராய், நிரம்ப அழகியராய், சித்தத்தில் இருந்தது மூன்றாவது படம்; பாம்பை அணிந்து, தோலை உடுத்தி, சுடலைச் சாம்பர் பூசியவராய்க் காட்சி தந்தது நான்காவது படம்; நீண்ட கரத்தராய், நெறிதரு குஞ்சியராய், பாண்டிநல் நாட்டினராய் இருந்தது ஐந்தாவது படம், உத்தரகோச மங்கையினராய் நெஞ்சில் மன்னி இருப்பது ஆறாவது படம்; வெள்ளுடை அணிந்து, நெற்றியில் வெண்பொடி பூசி, படுப்பதற்குரிய போர்வையுடன் இருந்தது ஏழாவது படம்; தாளி இனத்தைச் சேர்ந்த அறுகம்புல்லைச் சூடியவராய், சந்தனச் சாந்து பூசியவராய் இருந்தது எட்டாவது படம்; உமையொருபாகராயும், தபசி வேடத்த ராயும், பிச்சை எடுப்பவராயும் இருந்தது ஒன்பதாவது படம்; கொன்றை, வில்வம், ஊமத்தம் என்பவற்றைச் குடியவராயும், இளம்பிறையைச் சடாபாரத்தில் அணிந்தவராயும் இருப்பது பத்தாவது படம். திருப்பெருந்துறையில் தமக்கு அருள்செய்தவர் மதுரைச் சொக்கனே என்பதை உணர்ந்துகொண்ட பின்னர், அவனை நினைக்க நினைக்க இந்தப் பத்து வடிவங்களிலும் காட்சிதந்து மறைந்தவன் அவனொருவனே என்ற எண்ணம் வலுப்பெறுகிறது. இவை ஒவ்வொன்றாக மனத்திரையில் தோன்றி மறையும்போது, எத்தனை வேடங்களில் தோன்றி மறைந்தாலும், இப்பெருமான் தம் உள்ளத்தில் நிலையாகக் குடிகொண்டுள்ளான் என்பதை நினைந்து ஆறுதல் கொள்கின்றார்.