பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 391 உள்ளத்திற்கு இல்லை. அதனால் என்ன நடைபெற்றது? திருமுடியின் மேலுள்ள ஊமத்தம் பூ காட்சி தந்தவுடன் முன்னரே நைந்துள்ள இவருடைய உள்ளம் உன்மத்தம் ஆகிவிடுகிறது. ஆக, வாடிய உள்ளம், நைந்து, இறுதியில் உன்மத்தமாகவே ஆகிவிடுகிறது. உண்ணின்று உருக்குகிறார், சித்தத்து இருக்கிறார், உள்ளம் கவர்கிறார் முதலிய உள்ளத்தில் அமைதியளித்த எண்ண ஒட்டங்கள் மறைந்துவிட, நைந்த உள்ளமாக மாறி இறுதியில் அந்த உள்ளம் உன்மத்த நிலையை அடைகிறது. உன்மத்த நிலை என்றால் என்ன? தான் யார் என்பதை அறியாத நிலையே உன்மத்த நிலையாகும். மேலே ஒன்பது பாடல்களில் உன்மத்த நிலை இல்லை. அடிகளார் தாம் யார் என்பதையும் குருநாதர் எந்தெந்த வடிவில் காட்சி தந்தார் என்பதையும் விவரமாகக் கூறுவதால் அங்கு உன்மத்த நிலை இல்லை ஆனால், ஒரு வளர்ச்சி நிலை இருக்கின்றது. அந்த வளர்ச்சி நிலையிலும் இரண்டு நிலைகளை அடிகளார் உணர்ந்தே பாடுகிறார். அவையாவன, உள்ளம் வாடும் நிலையும் நையும் நிலையுமாகும். - உள்ளம் நையத் தொடங்கியவுடன் அந்த உள்ளத்தின் ஆணிவேராக இருந்த தற்போதம் அதனோடு ஐக்கியமாகி நையத் தொடங்கிவிடுகிறது. இப்பொழுது தம்மைத் தனியே நிறுத்தி, தாம் கண்ட காட்சிகளை வரிசைப்படுத்திக் கொண்டு வந்த அடிகளாரின் தற்போதம் நைந்துவிட்டது. அடிகளாரின் உள்ளத்தையும் தற்போதத்தையும் நைய வைத்தது, இறைவன் காட்டிய பல்வேறு வேடங்களாகும். இப்பொழுது உள்ளமும், தற்போதமும் இணைந்து நைந்து, தனித்து, கனிந்து பழுத்த நிலையில் உள்ளன. இந்த நிலையில்தான் மத்தம் சூடிய திருமுடி காட்சியளிக்கிறது.