பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 இந்தக் காட்சியைக் காணத்தொடங்கிய நேரத்தில் அடிகளாரின் உள்ளமும் தற்போதமும் இணைந்து பழுத்த நிலையில் இருந்ததல்லவா? இப்பொழுது அந்த ஊமத்தம் பூ இணைந்து கனிந்த தற்போதத்தைத் தன்வயமாக்கிக் கொண்டது. எனவே, அடிகளாரின் தற்போதம் ஊமத்தம் பூவுக்குள் கரைந்துவிடுவதால் இவர் உன்மத்தராகிவிடுகிறார். உன்மத்தராகிவிடுதல் என்றால் காண்பான் (அடிகளார்) காட்சி, காணப்படுபொருள் (ஊமத்தம் பூவை அணிந்த திருமுடி) என்ற மூன்று நிலையும் அழிந்து, காணப்படுபொருளாகவே எஞ்சிநிற்றல் ஆகும். இங்குக் காண்பாருடைய தற்போதம் அழிந்துவிட்டதால் பிறர் அவரைப் பார்க்கும்போது பைத்தியம் என்று கூறுகின்றனர். இந்த நிலையைத்தான் நாவரசர் பெருமான், முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் (திருமுறை: 5-25-7) என்ற திருத்தாண்டகத்தில் தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள், தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே” என்று கூறியுள்ளார். நாவரசர் கூறிய தன் நாமம் கெட்டாள்’ என்பதை 'என் உள்ளம் நையும்’ என்ற தொடரால் அடிகளார் குறிப்பிட்டார். இவ்விரண்டுமே தற்போதம் கெடும் நிலையைக் கூறியவாறாயிற்று. நாவரசரின் தலைப்பட்டாள் நங்கை தலைவன்தாளே என்னும் பகுதி, தலைவி தன் தனித்தன்மையை இழந்துவிட்டான் என்பதையும் குறிக்கின்றது. அதனையே அடிகளார் உன்மத்தமே என்ற சொல்லால் குறிக்கின்றார். அடிகளாரின் வரலாற்றை வரன்முறையாக வரலாற்று அடிப்படையில் கூறும் நூல் எதுவுமில்லை. எனவே, அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்கள், நிகழ்வுகள் முதலியவற்றை அறிந்துகொள்ள வாய்ப்பில்லை அதுமட்டுமன்றித் திருவாசகத்தின் பல பகுதிகளை எங்கே, எப்பொழுது பாடினார் என்று அறுதியிட்டுச் சொல்லவும் வாய்ப்பில்லை.