பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 முதலாவது இறைவனுடைய இயல்பு, பெருமை ஆகியவற்றைப் பேசுவதாகும். இத்துணைப் பெருமை யுடையவன் கேவலம் மனிதர்களாகிய எமக்காக இந்த மண்ணிடை வந்து ஆட்கொண்டான் என்று கூறுவது இரண்டாவதாகும். பலப்பல பாடல்களில் அங்கங்கே கூறியவற்றை யெல்லாம், தொகுத்துப் பத்துப் பாடல்களுக்குள் மேலே கூறிய இரண்டு கருத்துக்களும் விரிவாக இடம்பெற வேண்டும் என்று அடிகளார் கருதினார்போலும். அவருடைய கருத்துக்கு வடிவுகொடுக்க வாய்ப்பாக அமைந்தது திருப்பள்ளியெழுச்சி யாகும். திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் மரபுபற்றி எழுந்தன என்று கூறுவதிலும் தவறில்லை. ஆனால், திருப்பள்ளி யெழுச்சியின் பத்துப் பாடல்களையும் ஒரே நேரத்தில் படித்தால் சில சிந்தனைகள் தோன்றுகின்றன. உறக்கம், விழிப்பு, வடிவு, நிறம், குணம் ஆகிய எதுவுமில்லாதவன் இறைவன் என்பதனை அடிகளார் நன்கு அறிந்திருந்தார். ஆனால், அதே இறைவன் மானிட வடிவு தாங்கி, அதிலும் ஒரு குருநாதரின் கோலங்கொண்டு திருப்பெருந்துறையில் எழுந்தருளி இருந்தான். அந்தக் குருநாதரின் முகமும், கைகளும், திருவடியும் அடிகளாருக்கு மிகவும் பரிச்சயமானவை. புன்சிரிப்டோடு வரவேற்றதால் முகமும், அமுத தாரையை எற்புத் துளைதொறும் ஏற்ற, உடலைத் தடவிக் கொடுத்ததால் கமலம்போன்ற குருநாதரின் கைகளும், தம்மைத் திசை திருப்பிய கமலம் போன்ற அவர் திருவடிகளும் அடிகளாருக்கு மிகவும் பரிச்சயமானவை. இந்தப் பள்ளியெழுச்சிப் பாடலைப் பாடுங்காலத்தில் அங்கே குருநாதர் இல்லை. எவ்வித நிகழ்ச்சியும் நடைபெற வில்லை. அப்படியிருக்க, திருப்பள்ளியெழுச்சி பாட வேண்டும் என்ற எண்ணம் அடிகளார் உள்ளத்தில் எப்படி உதயமாயிற்று: