பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 403 பாடல்களிலும் அவனுடைய எளிவந்த தன்மையை மிக அழகாக எடுத்துக் காட்டியுள்ளதை மேலே தந்துள்ளோம். இதிலுள்ள தனிச்சிறப்பு என்னவென்றால், அவனது உயர்வை ஒரிடத்திலும், எளிவந்த தன்மையை மற்றோரிடத் திலும் கூறாமல், யாவரும் எளிதில் அறிந்துகொள்வதற்காக ஒரே பாடலின் முற்பகுதியில் உயர்வையும், பிற்பகுதியில் எளிவந்த தன்மையையும் கூறியுள்ளமையேயாம். ஒரு கூட்டத்தில் எத்தனை மக்களுண்டோ அத்தனை வேறுபட்ட மனப்பான்மைகளும் இருந்தே தீரும். இவர்கள் அனைவரும் இறைநேசர்களாக இருக்கலாம். என்றாலும், இறைவனை வணங்கும்போதுகூட இவர்களுடைய மனோ நிலைக்கு ஏற்ப இவர்கள் செயல்கள் மாறுபடும். உள்ளத்து உணர்ச்சி ஒன்றேயாயினும் உடலில் நிகழும் புறச்செயல்கள் மாறுபட்டவை. ஒரே மனநிலையுடைய இருவர் செயற்படும்போது வெவ்வேறு முறைகளில் செயற்படுவர். இந்தச் செயல்கள் அவர்கள் மனநிலையைக் காட்டுமேனும், ஒரே மனநிலையை உடைய இருவர் ஒரே மாதிரி தொழிற் படுவதில்லை; ஒரே மாதிரி தொழிற்படும் இருவர் ஒரே மனநிலையில் உள்ளார்கள் என்று சொல்வதற்கும் இல்லை. ஒரே பாடலில் அடியார்கள் பலர் ஒன்றுகூடினாலும் அவர்கள் செயல்கள் வெவ்வேறானவை என்பதை 'இன்னிசை வீணையர் (37) என்ற பாடலில் அடிகளார் நன்கு எடுத்துக் காட்டுகின்றார். வீணையும், யாழும் ஏறத்தாழ ஒரே மாதிரியான கருவிகள்தாம் என்றாலும், இருவேறு கூட்டத்தினர் இந்த இருவேறு கருவிகளையும் வைத்து நிற்பதைப் பேசுகின்றார். இருக்கு வேதத்தை அத்யயனம் செய்பவர்கள் அதில் தோன்றும் ஒசை ஒன்றிற்காகவே பாடுகிறார்கள். ஆனால், தோத்திரம் பாடுவோர், பொருள் செறிந்த பாடல்களை ஒரு கூட்டமாக நின்று பாடுகின்றார்கள். மலர் மாலையைக் கையில் வைத்துக்கொண்டு நிற்பவர் ஒருபுறம் நிற்கிறார்கள்.