பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 411 நெய்போலப் பேசாதிருக்கிறான் அவன் என்ற உவமை, இந்த நம்பிக்கை துளிர்விடுவதை அறிவிக்கின்றது. தம்மைக் குருநாதர் ஒதுக்கிவிட்டார் என்று இதுவரையில் பேசியவர், இப்பொழுது 'பிரைசேர்' பாலின் நெய்போல’க் குருநாதர் உள்ளார் என்று பேசுவது துளிர்விடும் அந்த நம்பிக்கையைக் காட்டுவதாகும். பிரைசேர் பாலின் நெய்போல வெளிப்பட்டு அருள்செய்யாமல் குருநாதர் மறைந்துள்ளார் என்று கூறுவதில் ஒரு கருத்துப் பொதிந்துள்ளது. பாலினுள் மறைந்திருக்கும் நெய், வெளிப்பட வேண்டுமேயானால், அந்தப் பாலுக்குப் பிரையிடவேண்டும். பிரையிடாவிட்டால் நெய் எளிதில் வெளிப்படப்போவதில்லை. பிறவிக் கடலைக் கடந்து முன்னேறக்கூடிய ஆற்றல் அடிகளாரிடம் இருப்பினும், திருவருள் என்ற பிரை குருநாதர் வடிவில் வந்து இடப்பட்ட பிறகே, அது வெளிப்படும். திருப்பெருந்துறையில் பிரையிட்டாகிவிட்டது. அவர் வழியே பணி செய்துகொண்டிருத்தலின், பிரையிட்ட பால் தயிராக மாறுவதற்குரிய காலக் கெடுவும் முடிந்துவிட்டது. இப்பொழுது பாலிலுள்ள நெய் வெளிப்படவேண்டும். தயிர் கடையப்படுவதுபோல, குருநாதரின் அருள் பணிபுரிய வேண்டும். ஆனால், அவர் பேசாது இருந்துவிடுகிறார். எனவே, அடிகளாரின் முன்னேற்றம் தடைப்படுகிறது. பிரையிட்டவர் கடைதலாகிய பணியைச் செய்யாமல் இருப்பாரேயானால் அது யாருடைய குற்றம் என்று கேட்கும் முறையில் பேசாது இருந்தால் ஏசாரோ? என்கிறார். பிற்பட்டு ஒழிதல் தம் குற்றம் என்று 379ஆம் பாடலில் பேசியவர், இப்பொழுது சுருதியை மாற்றி, பேசாது இருத்தல் குருநாதரின் தவறு என்றும், இதனை அறிந்த உலக மக்கள் அவரை ஏசுவார்கள் என்றும் பேசுகிறார்.