பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 415 ஒருவருடைய வாழ்க்கையில் மிகச் சிறப்பாகக் கருதப்படும் ஒரு நிகழ்ச்சி, எந்த ஊரில் நடைபெற்றதோ, அந்த ஊரைப்பற்றிய நினைவும், அதை நினைக்கும்போது ஒரு தனிப்பட்ட மகிழ்ச்சியும் ஏற்படுதல் இயல்பேயாகும். அடிகளாரைப் பொறுத்தமட்டில் அவர் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றி, மணிவாசகராக வெளிவரச் செய்தது திருப்பெருந்துறை நிகழ்ச்சியே ஆகும். சொக்கன் பரிமேல் வந்தது; வந்திக்குக் கூலியாளாய் வந்தது; மண் சுமந்தது; பிரம்படிபட்டது ஆகிய அற்புதச் செயல்கள் அனைத்தும் மதுரையில்தானே நடந்தேறின? ஆனால், இந்த நிகழ்ச்சிகள் எதுவும் அடிகளார் மனத்தில் ஒரு பெருந்தாக்கத்தை ஏற்படுத்தின என்று கூறுவதற்கில்லை. இவ்வாறு கூறுவதால் இவற்றை அவர் குறைத்து மதிப்பிட்டுவிட்டார் என்று தவறாக நினைந்துவிட வேண்டா. இவை யாவும் செயற்கரும் செயல்களே ஆகும். இவற்றைச் செய்தவன் சொக்கனே என்பதை நன்கு அறிவார் அடிகளார். அப்படியானால் இவற்றை அல்லவா நினைவில் இருத்திப் பெரிதாகப் பாடியிருக்க வேண்டும்? அவ்வாறின்றிக் குருநாதராக வந்து, தம்மை தடம் மாற்றியதையே விடாமல் கூறுகிறாரே ஏன்? மேலே காட்டிய அற்புதச் செயல்களைச் சொல்லும் பாடல்களை விட ஏறத்தாழ மூன்று பங்கு அதிகமாகத் தமக்கு அருள் செய்தமையையும் தம்மை மாற்றிப் பணிகொண்ட மையையும் அடிகளார் நன்றிப் பெருக்கோடு நினைக்கின்றார். இது ஏன் என்று ஒரு விநாடி நின்று நிதானித்தால் இதன் அடிப்படை எளிதில் விளங்கிவிடும். மேலே கூறிய அற்புதச் செயல்கள் சாதாரண உலகியல் நிகழ்வுகளுக்கு அப்பாற்பட்டுள்ளவையே என்பதை நாம் அறிவோம். அதனாலேயே அவற்றை இயற்கையினிறந்த நிகழ்ச்சிகள் என்று கூறுகின்றோம். இவை மாபெரும் சிறப்புடையவை