பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. திருக்கோத்தும்பி |சிவனோடைக்கியம்) தலைவனிடம் ஈடுபாடுகொண்ட தலைவி, அவன் வாராக் காலத்து, தன்னை மறந்துவிட்டானோ என்று அஞ்சி, வண்டு முதலியவற்றைத் துதாக அனுப்புதல் தமிழ் இலக்கியத்தின் பழைய மரபாகும். பக்தி இயக்க காலத்தில் நம்மாழ்வார், நாரை முதலியவற்றைத் தூதாக அனுப்புகின்ற முறையில் (நாலாயிரத் திவ்விய பிரபந்தம்: திருவாய்மொழி 2ஆம் பத்து) பாடல்கள் பாடியுள்ளார். (திருமங்கை மன்னன் தும்பி, குயில் முதலிய பறவைகளைத் தூதாக அனுப்புவதாகவும் ஆண்டாள் நாச்சியார் குயிலை தூதாக அனுப்புவதாகவும் பாடல்கள் உள்ளன) அக்கால இலக்கியங்களில் தூதாக அனுப்பப்படும் பொருள்கள் கிளிமுதல் வண்டுவரை எதுவாக இருப்பினும் அது அஃறிணைப் பொருளாகவே இருக்குமென்பது அறியப்பட வேண்டும். - துதாக அனுப்பப்படும் கிளி, வண்டு முதலியவற்றிற்குத் தலைவியின் பேச்சைப் புரிந்துகொள்ளும் ஆற்றலோ தலைவனிடம் சென்று சொல்லும் ஆற்றலோ இல்லை என்பது தலைவி முதல் யாவரும் அறிந்த ஒன்றாகும். அப்படியானால், தலைவனின் சிறப்புக்களையெல்லாம் ஒன்றாக அடுக்கி, அவனைப் பிரிந்திருப்பதால் தான் படும் துயரத்தை யெல்லாம் ஒன்றாக அடுக்கி இந்தக் கிளி, வண்டு முதலியவற்றிடம் கூறுவதன் பொருள் என்ன? இந்த அஃறிணைப் பொருள்களுடன் பேசும் தலைவியின் பேச்சு, பொங்கிவரும் அவள் உணர்ச்சிக்கு வடிகாலாய் அமைகின்றது.