பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 இத்தொடரில் வரும் சட்ட என்ற சொல்லுக்கும் அழகாகப் பொருந்துவதைக் காணலாம். இப்பாடலின் பொருளை அறிய முற்படுமுன் பாடலின் சொற்களைப் பின்வருமாறு கொண்டு கூட்டுச் செய்து கொள்வது நலம். சட்டோ நினைக்க மனத்து அமுதாம் சங்கரனை மறப்பேனோ? கெட்டேன்! கேடுபடாத் திருவடியை ஒட்டாத பாவி நாம் தொழும்பரை உருவறியோம்'. இப்பாடலின் பொருளை இந்தக் கொண்டுகூட்டுக்கு ஏற்பக் காண்டது முறையாகும். 'செம்மையாக (சட்டோ) நினைக்கத் தொடங்கியவுடன் ஆழ்மனத்தின்கண் அமுதம் போல் ஊறுகின்ற சங்கரனை நான் மறப்பேனோ? ஒரு வேளை மறந்தால் அந்த விநாடியே கெட்டேன். (திருப்பெருந்துறையில்) திருவடிகள் என்னை மாற்றியவுடன் அக்கேடுபடாத் திருவடியை ஒட்டிக்கொண்டு சென்றிருக்க வேண்டும். சந்தர்ப்பத்தை நழுவவிட்டு அத்திருவடியோடு ஒட்டாத பாவியாகிவிட்டேன். அதனால் விளைந்த பயன் என்ன? அத்திருவடியை மறந்ததுமட்டு மன்றி அத் திருவடியை என்றும் தமது ஆழ்மனத்தில் தாங்கி நிற்கும் தொழும்பர் கூட்டத்தைகூட இனங்கண்டுகொள்ள முடியாத பாவியாகிவிட்டேன்' என்றவாறு. ஒட்டாத பாவி என்ற தொடர் மத்திம தீபமாக நின்று சங்கரனை மறந்ததால் ஒட்டாத பாவி ஆனோம் என்றும், அடியார்களைக்கூட இனங்கண்டு, அவர்களோடு ஒட்டிச் செல்லாத பாவியானோம் என்றும் பொருள் தந்து நிற்கின்றது. இப்பாடலிலும் வேறு பல பாடல்களிலும் தன்மை ஒருமையிலும் தன்மைப் பன்மையிலும் அடிகளார் தம்மைச் சுட்டுவதைக் காணமுடியும்.