பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோத்தும்பி 57 உதாரணமாக, திருவாசகத்தின் 12ஆம் பாடலில், .......உன் அடியேன் செய்த வல்வினையைக் கழிதரு காலமுமாய் எம்மைக் காப்பவனே என்றும், 190ஆம் பாடலில், ........ உணர்வாய் என் உட்கலந்து தேனாய் அமுதமுமாய்த் திங்கரும்பின் கட்டியுமாய் வானோர் அறியா வழி எமக்குத் தந்தருளும் என்றும் வருவதைக் காண்க. அவ்வாறின்றித் தன்மைப்பன்மையில்மட்டும் தம்மைச் சுட்டிக்கொள்கின்ற பாடல்களும் உண்டு. எடுத்துக் காட்டாகத் திருவாசகத்தின் 180ஆம் பாடலில், நாட்டார் நகை செய்ய நாம் மேலை வீடெய்த என்றும், 201ஆம் பாடலில், நாடவர் நம்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப என்றும் வருவதைக் காணலாம். இது எவ்வாறாயினும் அடிகளாரின் பண்புநலனும், அடக்கமுடைமையும், இறை உணர்வும் அவர் தம்மைத் தாம் சுட்டும்பொழுது, தன்மைப்பன்மையில் சுட்ட மாட்டார் என்பதை அறிவுறுத்தும். நாம் என்றும், நமக்கு என்றும், எமக்கு என்றும் வருகின்ற இடங்கள் அனைத்திலும் சொல்லால் இவை பன்மையாயினும் பொருளால் இவை ஒருமையாகவே உள்ளன. நாம் என்பதை நான் என்றும், எம் என்பதை எனது என்றும், நமக்கு என்பதை எனக்கு என்றுமே பொருள் கொள்ள வேண்டும்.