பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட் பத்து 109 459. நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக் கண்ணனே விண் உளார் பிரானே ஒருத்தனே உன்னை ஒலம் இட்டு அலறி உலகு எலாம் தேடியும் காணேன் திருத்தம் ஆம் பொய்கைத் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் அருத்தனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே 2 இப்பாடலுக்குப் பொருள் காண்பதில் சற்றுக் கவனத்தோடு இருத்தல் நலம். நிருத்தன், நீற்றன், நெற்றிக் கண்ணன் என்ற சொற்கள் இறைவனுக்கு மனிதர்கள் தந்துள்ள பல்வேறு வடிவங்களைக் குறிப்பனவாகும். ஒவ்வொரு திருக்கோயிலிலும் இந்தப் படிமங்கள் உள்ளன. எனவே, அடிகளார் தேடியும் காணேன்' என்று சொல்லும் போது இந்தப் படிமங்களைக் கூறவில்லை என்பது தெளிவு. - இப் படிமங்கள் வடிவில் காட்சியளிக்கும் மூலப் பொருள், நிருத்தம் முதலிய செயல்களைச் செய்துகொண்டிருந்தாலும் அதனை ஊனக் கண்களால் காண்டது இயலாத காரியம். அடிகளார் குருந்த மரத்தின் அடியில் குருநாதர் வடிவிலுள்ள ஒருவரைக் கண்டது உண்மை. அந்த வடிவைக் கண்டுகொண்டிருக்கும் அதே நேரத்தில் அவ்வடிவம் மறைகிறது. அவ்வடிவினுள் உமையொருபாகன் காட்சியளிக்கிறான். பிறகு அந்த வடிவும் மறைகிறது. தில்லைக் கூத்தன் காட்சியளிக்கிறான். விநாடி நேரத்தில் எல்லா வடிவுகளும் தோன்றி மறைந்துவிடுகின்றன. இப்பொழுது அடிகளார் தாம் கண்ட காட்சிகளை நினைவில் வைத்துக்கொண்டு, குருவடிவைத் தேடுகிறார்; கிட்டவில்லை. உமையொரு பாகனைத் தேடுகிறார்; கிட்டவில்லை. நிருத்தனைக் தேடுகிறார்; கிட்டவில்லை. இந்த அடிப்படையில்தான் இப்பாடல் எழுகிறது.