பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கழுக்குன்றப் பதிகம் 121 பெருந்துறைப் பெருமான்’ என்றார். அவனுடைய நாமங்களை உள்ளன்போடு உச்சரிப்பவர்களுடைய துன்பத்தைத் துடைத்து, ஒப்புமை சொல்ல முடியாத இணக்கிலாத ஆனந்தத்தைத் தருவான் என்க. இப்பாடலின் பின்னிரண்டு அடிகள் ஆழ்ந்து சிந்தித்துப் பொருள்காண வேண்டியவைகளாக உள்ளன. திருவாதவூரர் என்ற அமைச்சருக்குப் பிராரத்துவம், சஞ்சிதம், ஆகாமியம் என்ற மூன்று வினைகளும் இருந்தன என்பதை மறுத்தற்கில்லை. ஆனால், திருப்பெருந்துறையில் குருநாதர் தரிசனம், திருவடி தீட்சை என்பவை கிடைத்த பிறகு சஞ்சிதம், பிராரத்துவம் என்ற இரண்டும் எரிக்கப் பெற்றுவிட்டன. அந்நிலையில் திருவாதவூரர் சில காலம் மாணிக்கவாசகராக மாறி வாழ்கின்றார்; தலங்கள்தோறும் செல்கிறார். இந்த நிலையில் ஆகாமியம் என்ற ஒன்று வரத்தானே செய்யும்? ஆனால், அந்த ஆகாமியம், ஏனை உயிர்களைப் பொறுத்தமட்டில் சேர்ந்து சேர்ந்து மறுபிறப்பிற்கு வித்தாக அமையும். அடிகளாரைப் பொறுத்தவரை இந்த நிலை மாறிவிடுகிறது. குருநாதரின் திருவடி தீட்சை பெற்றவுடனேயே திருவாதவூரர் என்ற அமைச்சர் மறைந்துவிட, மணிவாசகர் என்றவர் உதயமாகிறார். அவரைப் பொறுத்தவரை அவருக்கென்று வினை எதுவும் இல்லை. புறத்தே இருந்து காண்பவர்களுக்கு மணிவாசகர் என்ற ஒரு மனிதர், பாடல்களைப் பாடிக்கொண்டு, சிரித்து, களித்து, தேனித்து, ஆடிக்கொண்டு திரிகிறார். ஆனால், அவருடைய உடல், பொருள், ஆவி அனைத்தும் குருநாதரிடம் முன்னரே ஒப்படைக்கப்பெற்றுவிட்டன. எனவே, அவர் செய்யும் எந்தச் செயலுக்கும் அவர் பொறுப்பாளி யாகமாட்டார். இந்த நிலையில் அவர் செய்யும் எந்தச் செயலும் ஏனையோர்களைப் போல அவருக்கு ஆகாமிய வினையை உண்டாக்காது. தி.சி.சி.IV 9