பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 'கண்டேனே' என்று அடிகளார் கூறியிருப்பினும் ஆனந்தத்தை உணர்ந்தார், அனுபவித்தார் என்பதே பொருள். அதனையே சிவமாக்கி எனை ஆண்ட அந்தமிலா ஆனந்தம் என்று பாடுகிறார். ஆனந்தம் என்பது வடிவமற்ற மிகமிக நுண்மையான ஒர் உணர்வாகும். அது புறமனம், அகமணம், மேல்சித்தம் ஆகியவற்றைக் கடந்து அடிச்சித்தத்தின் ஆழத்தில் தோன்றும் ஒர் உணர்வாகும். இந்த உணர்விற்குப் பருவடிவு எதுவுமில்லை. - இந்த ஆனந்தத்தைக் குருநாதர்தான் தந்தார் என்று அடிகளார் நினைத்துக்கொண்டிருக்கும்பொழுதே குருநாதர் மறைந்துவிட்டார். அந்த ஆனந்தமும் வடியத் தொடங்கி விட்டது. இந்த நிலையில், தம் சித்தத்தில் தோன்றிய ஆனந்தத்தையும் புறத்தே காட்சிதந்த குருநாதரையும் அடிகளார் வேறுபடுத்திக் காணவில்லை. குருநாதரே, ஆனந்தம்; ஆனந்தமே குருநாதர் என்ற முடிவுடன் இருந்தமையால்தான் அந்த ஆனந்தம் வேண்டும் என்று நினையாமல் குருநாதர் தரிசனம் மீட்டும் கிடைக்க வேண்டும் என்று விரும்பி ஊரூராகச் சுற்றி வந்தார். அவரையும் அறியாமல் ஆனந்தமாகிய நுண்பொருளும், குருநாதர் என்ற பருவடிவும் ஒன்றாகவே இணைந்து விட்டன. இந்த மனநிலையில் தில்லைக்கு வந்த அடிகளார் கூத்தனைக் கண்டார். அங்கே ஒர் அற்புதம் நிகழ்கின்றது. ஒரு விநாடி கூத்தன் காட்சி தருகிறான்; அடுத்த விநாடி குருநாதர் காட்சி தருகிறார்; அடுத்த விநாடி பரு வடிவுடைய குருநாதரும், கூத்தனும் மறைந்து ஆனந்தம் சித்தத்தில் நிரம்பி நிற்கின்றது. இந்த மூன்றும் ஒன்றே என்று கருதியதால்தான் 'அந்தமிலா ஆனந்தம் அணிகொள்தில்லை கண்டேனே' என்று பாடுகிறார்.