பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 செல்லும் இயல்புடைய சித்தத்தைப் பெயராமல் இருக்கக் குருநாதர் கையாண்ட வழி என்ன தெரியுமா? அடிகளாரின் சித்தத்தைத் தம் திருவடியோடு சேர்த்து வலிய கயிற்றால் கட்டியதுபோலக் கட்டிவிட்டார். இனி, சித்தம் எனும் திண்கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த’ என வருவதால் பின்வருமாறும் பொருள் கூறலாம். இங்குச் சித்தமே கயிறாக உள்ளது. திருப்பாதம் தன்னுள் வந்து தங்குமாறு செய்து, அச்சித்தம் தானே கயிறும் ஆகி அத்திருவடியைப் பிணித்துக்கொண்டது என்க. அவ்வாறு பொருள்செய்யும்போது கட்டுவித்த வித்தகன்’ என்ற தொடர் பிரச்சினையை உண்டாக்கும். இந்நிலையில் கட்டுவித்த வித்தகன் என்பதற்கு, வித்தகனை ஏவுதற் கர்த்தாவாக ஆக்கி, சித்தம் என்ற கயிற்றைக் கொண்டு தம் திருவடிகள் அடிகளார் உள்ளத்தில் தங்குமாறு கட்டுவித்தான் என்றும் பொருள்கொள்ளலாம். மேலே கூறிய இரண்டு பொருளன்றியும் மூன்றாவது ஒரு பொருளையும் கருதுமாறு இந்தத் தொடர் அமைந்துள்ளது. ஒருவரை ஓரிடத்திலிருந்து நகராமல் இருக்கச்செய்ய ஒரே ஒரு வழிதான் உண்டு. அவர் கால்களை இறுகப் பிடித்துக் கட்டிவிட்டால் அவர் எங்கும் பெயர்ந்துசெல்ல முடியாதல்லவா? அதே முறையில் என் உள்ளத்துள் வந்து தங்கிய குருநாதர் திருவடி, வேறு எங்கும் போய்விடாமல் இருக்க, அத்திருடிவகளை, என் சித்தம் என்னும் திண் கயிற்றால் நான் கட்டினேன்’ என்கிறார். அப்படிச் சொல்வதில் ஒரு சிறு குறை ஏற்படும். அனைத்தையும் கடந்துநிற்கும் அத்திருவடி, எப்படி இவர் கட்ட இடம் கொடுக்கும்? அந்தக் குறையைப் போக்க, என் சித்தம் எனும் திண்கயிற்றால் தம்முடைய திருப்பாதத்தை யான் கட்டுவதற்கு, குருநாதரே அருள்புரிந்தார் என்ற பொருளில் ‘கட்டுவித்த என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.