பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இப்பதிகத்தினுள்ள புதுமை நன்கு விளங்கும். அடியார் நடுவுள் இருக்கவேண்டும் என்று இதுவரை கூறிவந்த பகுதிகளுள், நடுவுள் இருந்தபோது என்ன கிடைத்தது, அது இல்லாதபோது என்ன நடந்தது என்பதை அங்கு விரித்துக் கூறவில்லை. இந்தப் பதிகத்தில் அதனை விரித்துக் கூறுதலின் இப்பதிகம் பிரார்த்தனைப் பத்து என்ற தலைப்பில் தனியே வைக்கப்பெற்றுள்ளது போலும். - பிரார்த்தனைப் பத்து என்ற பெயரைப் பெற்றாலும், இத்தொகுப்பினுள் பதினொருபாடல்கள் அமைந்திருப்பதைக் காணலாம். பதினோராவது பாடல் முதற் பாடலில் தொடங்கிய ஒரு கருத்தை, மிக அழகாகவும் விரிவாகவும் பேசுவதைக் காணலாம். அன்றியும் இப்பாடல் கலந்தே' என்று முடிவதாலும் அந்தாதியின் மரபுப்படி இந்தக் 'கலந்தே என்ற சொல் முதற்பாடலின் முதற்சொல்லாக மண்டலித்து வருவதாலும் இந்தப் பதினொரு பாடல்களும் ஒரு தொகுப்பே என்பதற்கு ஐயமில்லை. இதற்கு முன்னரும்கூடப் பல அந்தாதிப் பத்துக்கள் உள்ளன. ஆனால், அவை ஒன்றிலும் பதினோராவது பாடல் இல்லை. இப்பதிகத்தில் பதினொன்றுக்குமேல் சில பாடல்கள் இருந்து மறைந்திருக்கலாம் என்று நினைப்பதற்கும் வழியில்லை. காரணம், பதினோராம் பாடலின் கடைசிச் சொல் முதற்பாடலின் முதற் சொல்லாக வருவதால் இவ்வாறு நினைக்கவும் வழியில்லை. பதினொரு பாடல்களை அந்தாதித் தொடையாக ஆக்கி, ஒரு தனித்தொகுப்பாக அடிகளாரே அமைத்தாரா என்பது சிந்தனைக்குரியது. ரார்த்தனை என்பதற்கு மிகுதியும் இரந்துவேண்டுதல் என்று பொருள் கண்டோம். இப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் தாம் அவ்வாறு இரந்து வேண்டுவதற்குரிய காரணத்தை அடிகளார் அழகாக விளக்கியுள்ளார். அடியார் கூட்டம் எவ்வாறிருந்தது, என்ன செய்தது, என்ன