பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிரார்த்தனைப் பத்து - 185 இவ்வளவு சதைப்பற்றும் எங்கே போயிற்று என்பதை போரும் அறிய முடியாது. ஆனால், அதே நேரத்தில் ஒரு சிறு ஓட்டைகூட அதில் இல்லாததால் வெளியே உள்ள காற்றுக்கூட உள்ளே புக வாய்ப்பில்லை. இதைவிடச் சிறப்பு, எவ்வளவு பெரிய சுரைக்குடுக்கை ஆயினும், எவ்வளவு ஆழமான தண்ணீரில் போட்டாலும் மிதக்குமே தவிர உள்ளே அழாது. இக்கருத்துக்கள் அனைத்தும் உவமேயமாகிய அடிகளாருக்கும் ஏற்றப்படலாம். சுரைக்காயிலிருந்தும் சுரைக்குடுக்கையாக அது மாறும் போது புறத்தோற்றத்தில் எவ்வித வேறுபாடும் அதில் தெரிவதில்லை, அமைச்சராக இருந்த திருவாதவூரருக்கும் அருள் பெற்ற மணிவாசகருக்கும் உடம்பளவில் எவ்வித மாறுபாடும் ஏற்படவில்லை. சுரைக்காயின் உள்ளே உள்ள பகுதி காய்ந்து, ஒன்றும் இல்லாமல் போனது போல் திருவாதவூரரின், பொறிகள், புலன்கள், கரணங்கள் ஆகியவை காய்ந்து சருகாகிவிட்டன. இதுவரையில் இந்த உவமை சரியானதே. சுரைக் குடுக்கையில், காற்று உள்பட வெளியே இருக்கும் பொருள்கள் எதுவும் உள்ளே புகமுடியாதது போலக், குருநாதரின் அருள் முதலிய எதுவும் தன்னுள் புகவில்லையோ என்று வருந்துகிறார் அடிகளார். எவ்வளவு ஆழத்திலும் சுரைக்குடுக்கை மிதப்பது போல, குருநாதரின் அருள் வெள்ளத்தில் அமிழ்ந்து அனுபவிக்க முடியாமல் மேலாக மிதக்க வேண்டிய நிலை தமக்கு வந்துவிட்டது என்று வருந்துகிறார் அடிகனார். அதனாலேயே இந்த உவமையைப் பேசுகிறார்.