பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழைத்த பத்து 211 விரும்பித் தந்தாலும், அதனையே நானும் விரும்பி ஏற்கும் பொருளாகக் கருதி ஏற்றுக்கொள்வேன்’ என்பது உண்மை அன்பில் திளைத்துநிற்கும் கணவன் மனைவி இருவரிடையே இந்த மன நிலையைக் காணலாம். மகளிர் விரும்பி அணிவது புடைவையாகும். அதன் நிறம், அமைப்பு முறை, சாயல் என்பவற்றில் ஒவ்வொரு பெண்ணின் கற்பனையிலும் இவை தனித்து இடம் பெறும். இவற்றையல்லாத ஒரு புடவை எவ்வளவு சிறப்புடைய தாயினும் அந்தப் பெண் விரும்பி அணியமாட்டாள். என்றாலும், கணவன் தான் விரும்பி ஆசைப்பட்டு ஒரு புடைவையை வாங்கித் தருவானேயானால் அதனைப் பெருவிருப்பத்தோடு மகிழ்ந்து ஏற்றுக்கொள்ளுகிறாள். காரணம் அவன் தந்தது என்பதுதான். அதே மனநிலையில்தான் அடிகளாரும் யாது நீ அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டுகிறேன் என்கிறார். இரண்டாவது, மனித மனநிலையின் ஒரு வெளிப்பாட்டை உணர்த்துகிறது. மிக உயர்ந்த மனநிலையில் சத்துவ குணத்திலேயே அமர்ந்திருப்பவர்கள் கூடத் திடீரென்று கீழிறங்கி வந்து அற்பப் பொருளுக்கு ஆசைப்படுதலும் உண்டு. இவ்வாறின்றித் தம் மனம் இவ்வாறு கீழிறங்கிச் செல்வது, தம் ஊழ் வினையின் விளையாட்டு என்று கருதுபவர்களும் உண்டு. தற்போதத்தை அறவே ஒழித்துவிட்ட அடிகளார் போன்றவர்களின் மனத்தில் ஏதோ ஒன்று வேண்டுமென்ற ஆசை அல்லது விருப்பம் தோன்றுமானால் அது இறைவனால் தோற்றுவிக்கப்பெற்றது என்றே அவர்கள் கருதினர். அதனையே வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உந்தன் விருப்பன்றே என்று பாடுகின்றார்.