பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 502. அன்றே என்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னை ஆட் கொண்டபோதே கொண்டிலையோ இன்று ஒர் இடையூறு எனக்கு உண்டோ எண் தோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே 7 இப்பாடலின் முதலடி திருப்பெருந்துறை நிகழ்ச்சியை நினைவூட்டுவதாகும். 'அன்றே என்ற சொல் திருப்பெருந் துறையில் குருந்தமரத்தடியில் இருந்து குருநாதர் இவரை ஆட்கொண்ட செயலைக் குறிப்பதாகும். அப்படி ஆட்கொண்டபோது அடிகளாரின் உடல், பொருள், ஆவி மூன்றையும் அவர் எடுத்துக்கொண்டார் என்று பேசுகிறார் அடிகளார். குருவினிடத்துச் செல்கின்ற ஒருவர் நிவேதனப் பொருள்களாகச் சிலவற்றை எடுத்துச் செல்வர். அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று குருவினிடம் விண்ணப்பம் செய்வர். அந்த நிவேதனத்தில் ஒரு சிறு பகுதியைக் குரு ஏற்றுக்கொண்டு, எஞ்சியதைப் பிரசாதமாகக் கொண்டுவந்தவருக்கே திருப்பித் தந்து விடுவார். இதுவே மானிட குருமார்களின் இயல்பாகும். ஆனால், குருந்த மரத்தடியில் இருந்த குருநாதர் மானிடர் அல்லர். எனவே, அவரை அடிகளார் வணங்கியபோது இவர்பாலுள்ள உடல், பொருள், ஆவி என்ற மூன்றையும் அவரே எடுத்துக்கொண்டார். எடுத்துக் கொள்ளலாமா, வேண்டாவா என்ற வினாக்களைக் குருநாதர் எழுப்பவில்லை; அடிகளாரின் மனநிலை என்ன என்றும் கேட்கவில்லை. திருவடிகளில் வீழ்ந்த திருவாதவூரரின் உடல், பொருள், ஆவி அனைத்தும்