பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 எல்லையாக உள்ளவன், மாபெரும் ஆற்றல் மிகுந்த, பாஞ்சசன்னியம் என்ற சங்கினை உடையவன். (வளைக்கையான்) அடுத்தவன் அறிவின் எல்லையில் நிற்பவன், வேதங்களை ஓயாமல் ஒதுபவன். ஆக, செல்வம், வன்மை, கல்வி, வேதம் ஆகிய அனைத்தும் நிறைந்த இருவர் மலரடி காணாமல் கலங்கி நிற்கின்றனர். அவர்களே கலங்கினர் என்றால், அவர்கள் கலங்குவதற்குக் காரணமானவனைத் தாம் துணைக்கு அழைப்பதில் தவறில்லை எனக் கருதுகிறார் அடிகளார். மேலே கூறப்பெற்ற இவ்விருவரும் அவனைக் காணக் கதறினார்களே கிடைத்தானா? கிடைக்கவில்லை என்பது உலகறிந்த ஒன்று. அப்படிப்பட்ட ஒருவனைத் தாம் துணைக்கு அழைத்தால் எவ்வாறு வருவான் என்று ஐயம் உறுபவர்க்கு விடையாக மலைமாதொரு பாகா என்கிறார். மாலுக்கும் அயனுக்கும் தட்டுப்படாதவன் ஒரு பெண்ணிற்காக இரங்கி, அவளைத் தன்னிலொரு பாதியாக ஆக்கிக் கொண்டான் என்று கூறுவதன்மூலம், தாம் அழைத்தால்கூட அவன் வருவான் என்ற உறுதிப்பாட்டையும் கூறினாராயிற்று.