பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. திருப்புலம்பல் (சிவானந்த முதிர்வு) இத்தலைப்பின்கீழ் வரும் மூன்று பாடல்களையும் ஒருங்கே படித்த பிறகு, இதில் எந்தப் பாடலில் எங்கே புலம்பல் உள்ளது என்று ஆராயத் தொடங்கினால், எந்தப் பாடலில் உள்ளது புலம்பல் என்பது விளங்குமாறில்லை. முன்னர் உள்ளவர்கள் தவறு செய்தால் பின்னே வந்தவர்கள் குருட்டுத்தனமாக அதனைப் பின்பற்றுவதும், முடிந்தால் அதற்கு அமைதி கூறுவதும் இந்நாட்டில் தொன்றுதொட்டு வரும் கொள்கையாகும். அந்த வகையில் பார்த்தால், யாரோ ஒருவர் இதற்குத் திருப்புலம்பல் என்று பெயரிட்டிருக்க வேண்டும். பாடலின் போக்கைச் சிந்திக்காமல் புலம்பல் என்ற பெயரிட்டவருக்குப் பின்வந்தவர்கள் தமக்குத் தெரிந்த சாத்திர வார்த்தைகளை உட்தலைப்புகளில் தூவிப் போயினர். அந்த முறையில் இந்த மூன்று பாடலுக்கும் உட்தலைப்பு சிவானந்த முதிர்வு என்று கொடுக்கப் பெற்றுள்ளது. சிவானந்தம் முதிர்ந்தால் சொற்கள் மறைந்து, அந்த அடியவர் பேரின்ப வெள்ளத்துள் ஆழ்ந்துவிடுவார். அந்த அனுபவத்திலிருந்து மீண்ட நிலையில் அதுபற்றிப் பாடுதல் உண்டு. இந்தப் பாடல்கள் அந்த முறையில் அமைந்ததாகவும் தெரியவில்லை. எனவே, சிவானந்த முதிர்வு என்ற உட்தலைப்பு எவ்விதத்திலும் பொருந்துமாறில்லை.