பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 புதிய அருட்குணங்கள் இருக்கவேண்டுமே தவிர, பழைய குணங்கள் இருத்தற்கில்லை. இது தருக்க ரீதியான உண்மை. ஆனால் இங்கு நடந்தது என்ன? குருநாதர் பொருளென மதித்து அருள் செய்தார். அதன் பின்னரும் அந்தப் ‘புலையனுக்கு’ப் புலைக்குணம் போகவில்லை. தருக்கித் தலையால் நடத்தல் ஒன்று, பராய் மரம்போல மனமும் சித்தமும் முண்டும், முடிச்சுமாக இருக்கின்ற நிலை இரண்டு; நீரை ஆறாகப் பெருகவிட வேண்டிய கண் ஒரு சொட்டுக் கண்ணிரும் விடாமல் மரக்கண் ஆனது மூன்று; குருநாதர் புகழைக் கேளாமல் இருக்கின்ற அளவிற்குச் செவியானது இரும்பினும் வலிதாகிவிட்டது நான்கு- என்ற நான்கு நிலைகளும் தொடர்ந்து இருந்ததாக அடிகளார் நினைத்ததால் ‘எற்றினுக்கு ஆண்டாய்? என்று அடிகளார் கேட்பது பொருத்தமாக அமைந்துவிடுகிறது. அடிகளார் பெற்ற இறையனுபவம் உச்ச கட்டம் வரையில் ஏறி, கீழே இறங்கும் தன்மையுடையது என்று முன்னரே குறிப்பிட்டுள்ளோம். 400ஆவது பாடலில் 'களித்துத் தலையினால் நடந்தேன் விடைப்பாகா' என்று. பாடியவர் அடுத்த பாடலிலேயே எற்றினுக்கு ஆண்டாய்” என்ற வினாவை எழுப்புகிறார். அந்த ஆனந்த நிலை தொடர்ந்து நீடித்திருக்குமேயானால் ‘எற்றினுக்கு ஆண்டாய் என்ற வினாத் தோன்றியிருக்கப்போவதில்லை. 400ஆவது பாடலிலேகூட 'களித்துத் தலையினால் நடந்தேன்’ என்ற தொடர் நடந்தேன் என்ற இறந்த காலச் சொல்லாக அமைக்கப்பெறுகிறது. ஆக, தலையால் நடந்ததற்குக் காரணமாக இருந்த களிப்புத் தொடரவில்லை என்பது தெளிவாகிறது. அத்தகைய களிப்பு அவர் விரும்பிய பொழுது மறுபடி வரவில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது. ஈடிணையற்ற அந்தக் களிப்பில் மிதந்தவர் அதிலிருந்து நீங்கி, மட்டமான உலகியல் வாழ்க்கையில்