பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 காமவலையில் ஆழமாகச் சிக்குண்டு மீளமுடியாமல் வருந்துவதை அறிவிப்பதாகும். நான்காவதாக உள்ள பகுதி, மேலே கூறப்பெற்ற முறையில் முற்றிலும் காமத்தில் மூழ்கி உடைந்துபோவதன் காரணத்தைக் குறிப்பாக விளக்குகின்றது. அந்தப் பகுதி 'சுருள்புரி கூழையர் சூழலில் பட்டு உன் திறம் மறந்து இங்கு இருள்புரி யாக்கையிலே கிடந்து எய்த்தனன்'(412) என்பதாகும். இத்தொடரில் வரும் 'உன் திறம் மறந்து' என்ற பகுதி ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பெண்ணை, பெண் இன்பத்தை, யாருமே வெறுத்து ஒதுக்கியதில்லை. இறைவனே உமையொருபாகனாக உள்ளான் என்று சொல்லும் இவர்கள் இதனைச் செய்ய மாட்டார்கள். அப்படியானால் தவறு எங்கே நிகழ்ந்தது? இல்லறத்திலிருந்து பெண்ணை மதித்துப் போற்றி வாழ்வு நடத்துவதில் தவறொன்றுமில்லை என்றாலும், அந்த வாழ்க்கையில் மற்றொரு பகுதி மறக்கப்படக் கூடாது. அதாவது, இந்த உடம்பையும் உயிரையும் தனு கரண புவன போகங்களையும் கொடுத்த ஒருவனை மறந்துவிட்டுப் பெண்ணின்பத்திலேயே மூழ்குதல்தான் பெருந்தவறு. அவனை மறவாமல் இதனை அனுபவிப்பதில் எவ்விதத் தவறுமில்லை. இது இவ்வாறாயின் அடிகளார் தளர்ந்தேன், உடைந்தேன், புரள்வேன் என்று கூறுவதன் நோக்கமென்ன? இவை அனைத்தும் இன்றி இன்பத்தை நுகர வேண்டுமானால் எந்த நேரத்திலும் இதனைத் தந்தவனை மறவாமல் இருந்திருத்தல் வேண்டும். அதனையே நான்காவதாக உள்ள பகுதியில், சுருள்புரி கூழையர் சூழலில் பட்டு இருள்புரி யாக்கையிலே கிடந்து எய்த்தனன்' என்று பாடவந்த அடிகளார். 'உன் திறம்