பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 வெறுப்புத் தோன்றுகிறது அடிகளாருக்கு. இதன் பிறகு வேறு பிறப்புத் தமக்கில்லை; சிவபுரம் செல்லவேண்டியது தான் அடுத்த கட்டம் என்பதை நன்கு அறிந்துவிட்டார் ஆதலின், சிவபுரத்தில் சென்றபிறகும் கண்கள் அவனைக் காணவேண்டும், வாய் அவன் புகழ் பேசவேண்டும், செவிகள் அவன் பேசும் சொல்லைக் கேட்கவேண்டும், கைகளால் அவன் திருவடிகளைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று அடிகளார் பாடுவதில் வியப்பொன்றுமில்லை. மேலே கூறிய கருத்துக்களுக்கு மாறாக இந்தப் பிறப்பிலேயே தலைவனிடமிருந்து ஒரு சொல்லைக் கேட்கவேண்டும் என்று பாடுகிறார் அடிகளார். அதற்கு ஒரு நல்ல காரணத்தையும் கற்பிக்கின்றார். முன்னர்ப் பல முறை எடுத்துக்காட்டியபடி மனம் ஒரோவழி சண்டித்தனம் செய்கின்றது. இந்தச் சண்டித்தனம் பாலுணர்வுபற்றிய தாகும். அதிலிருந்து மீள்வது கடினம். என்பதை வலையில் அகப்பட்டு நாயேன் நைஞ்சேன்' (427) என்ற தொடர்களால் குறிப்பிடுகின்றார். வலையில் அகப்பட்ட ஒரு பொருள் மீளவேண்டுமே யானால் அது மிகமிகக் கடினமான தொன்றாகும். இந்த வலையை அறுத்து, காப்பாற்றக்கூடியவன் ஒருவன்தான் உண்டு. அவன் எப்பொழுது வருவான், எப்படிக் காப்பாற்றப் போகிறான், என்பதெல்லாம் வலைக்குள் அகப்பட்டு இருப்பவர்க்குத் தெரிவதற்குக் காரணமில்லை. எனவே, நம்பிக்கை இழந்து நைந்துகொண்டிருக்கும் ஒருவன் காப்பாற்றப்படுவதற்கு முன்னர், இதோ உதவி வந்து கொண்டிருக்கிறது என்ற எண்ணம் அவன் மனத்திடைத் தோன்றினால் உயிர்வாழ ஏதுவாக இருக்கும். இந்த நம்பிக்கை தரும் சொல்லைத்தான் அஞ்சேல் என்ற சொல்லால் குறிக்கின்றார் அடிகளார். பவளத் திருவாயால் 'அஞ்சேல் என்று கூறிவிட்டால் விரைவில் உய்கதி கிடைக்கும் என்ற நம்பிக்கை வளர்ந்து, வலையிலிருந்து மீள உதவியாக இருக்கும்.