பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 341 அதிசயப் பத்து இப்பத்திற்கு அதிசயப் பத்து என்ற பெயர்வந்த காரணத்தை எளிதில் அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு பாடலும் 'அடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே என்று முடிவதைக் காணலாம். பத்தாவது பாடலில் அடியரொடு கூட்டியதற்கு அப்பாலும் ஒன்றைச் செய்தான்; அதுவும் ஒர் அதிசயம் என்கிறார் அடிகளார். தொன்றுதொட்டு இன்றுவரை 'அதிசயம் என்ற சொல்லை ஏறத்தாழ ஒரே பொருளில்தான் பயன்படுத்தி வருகிறோம். எதிர்பாராதது நடந்தால் அது ஒர் அதிசயம்; எதிர்பார்த்தற்கு மாறாக ஒன்று நடந்தால் அது ஒர் அதிசயம்; கிடைக்காது என்று அறுதியாக நம்பப்பட்ட பொருள் கிடைத்தால் அது ஒர் அதிசயம் என்ற முறையில் அதிசயத்தின் பொருளை ஒரளவு விளங்கிக் கொள்ள முடியும். - 'இவ்வழியிற் சென்றால் இறுதியிலுள்ள படுகுழியில் விழ நேரிடும்’ என்று அறிவிப்புப் பலகை அறிவிக்கின்றது. அருகே நிற்பவர்கள் இவ்வழியில் போனவர்கள் யாரும் கரை சேர்ந்ததில்லை; எனவே, போகவேண்டா என்று நெடுங்காலமாகக் கூறிவருகின்றனர். அப்படியிருந்தும் அந்த வழியில் சென்ற ஒருவர் தாம் கரை சேர்ந்ததோடு மட்டு மல்லாமல் தம்மைப் பின்பற்றி வருபவர்களையும் கரை சேர்த்தார் என்றால், இது அதிசயத்திலும் அதிசயமல்லவா? இந்த அடிப்படையை மனத்துள் வாங்கிக்கொண்டு, அதிசயப் பத்தில் வரும் (435 ஆம் 436 ஆம் பாடல்கள் தவிர ஏனைய) எட்டுப் பாடல்களையும் வரிசையாகக் கண்டால் அடிகளார் அதிசயம் என்று கூறுவது முற்றிலும் உண்மையே என்பதை விளங்கிக்கொள்ள முடியும்.