பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 மெய்ந்நெறி கண்ட ஞானிகள் அனைவரும், ஒருசிலர் தவிர, இந்த உடம்பைப் பொத்தை என்றும், ஊன் சுவர் என்றும், புழுப் பொதிந்து உளுத்து அசும்பு ஒழுகிய பொய்க்கூரை என்றும், இருள் திணிந்து எழுந்திட்டது ஒர் வல்வினைச் சிறு குடில் என்றும் கூறிப்போயினர். இந்த உடம்பை ஒழித்தாலொழிய உய்கதி அடைய முடியாது என்பதே அவர்களின் வாதமாகும். ஆனால், இதற்கு முற்றிலும் முரணாக ஒரு செயல் நடைபெற்றது என்று அடிகளார். பேசுகிறார். தம்மைப் பொறுத்தவரையில் இந்தக் கேவலமான உடம்பை மெய்யென்று நம்பி வாழ்ந்ததாகவும், அதுபற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் தம்மை ஆண்டு அடியரில் கூட்டியது ஒர் அதிசயம் என்பதாகவும் அடிகளார் கூறுகின்றார். உடம்பை மெய்யென நம்பி அவர் என்ன செய்தார்? தமக்கு உய்கதி தரக்கூடியவன் இன்னாரென்று அறிந்து மனத்திடை உருகி இறைவனை வழிபட்டிருக்க வேண்டும். மனத்திடை உருக்கம் கொள்ளாமல் போனது ஒரு தவறு. அதற்குமேலும் ஒரு படி சென்று மடவரலியர் தங்கள் திறத்திடை’ (428) நைந்தார். தலைவனை நினைந்து உருகாமல் போனாலும் போகட்டும்; நீதி, நேர்மை, நடுநிலை என்பவற்றை அறிவு கொண்டு ஆய்ந்திருக்க வேண்டும். தாமே இதனை ஆய வாய்ப்பில்லை என்றாலும், இதனை ஆய்பவர்கள் தொடர்பையாவது மேற்கொண்டிருக்க வேண்டும். இவை இரண்டையும் செய்யவில்லை என்கிறார். நீதியை நினைந்து அறிவது அறிவின் செயலாகும். அஃதின்றேனும் உணர்வின் செயலாகவுள்ள ஈடுபாடு, பக்தி என்பவற்றையாவது கைக்கொண்டிருக்கலாம். அதுதானும் செய்யவில்லை என்பதைப் பரவுவார் அவர் பாடு சென்று அணைகிலேன்' (432) என்று கூறுகிறார். இறையடியார்களோடு