பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 375 இதற்குப் பதிலாக, குருநாதர் கடைக்கண் பார்வை, அணுக்கதிர் வீச்சுப்போல் திருவாதவூரர்மேல் وسـالا அவருடைய வினைகளெல்லாம் கருகிச் சாம்பலாக, மணிவாசகராக மாறிவிடுகிறார். இருவினையொப்பு நிகழ்ந்துவிட்டமையின் எல்லாவற் றையும் உள்ளவாறு பார்க்கும் வாய்ப்பு, அடிகளாருக்குக் கிட்டியது. இதுவே இப்பதிகத்தின் முதற்பாடலில் (458) குறிப்பிடப்படுகிறது. திருவிளையாடற் புராணக் கதைகளும் திருவாதவூரடி கள் புராணமும்கூட ஆலவாய்ச் சொக்கன்தான் வந்திக்குக் கூலியாளாய் வந்து பிட்டுக்கு மண்சுமந்தான் என்று பேசுகின்றன. அப்படியிருக்க, 'பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பெரும் பித்தனே' (469) என்றல்லவா அடிகளார் பாடுகிறார். இதிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ளமுடிகிறது. திருவாதவூரிற் பிறந்து, மதுரையம்பதியில் வளர்ந்து அமைச்சராகவும் ஆன அடிகளாருக்கு, ஆலவாய்ச் சொக்கன்தான் அதிக ஈடுபாட்டைத் தந்தவனாவான். அவர்மட்டு மல்லாமல், அவருடைய மன்னனாகிய இரண்டாம் வரகுணனும் பெரும் பக்தன் ஆதலால், அவனும் சொக்கனிடம் அடிகளாரைப்போலப் பெரும் ஈடுபாடு கொண்டிருந்திருக்க வேண்டும். அப்படியிருந்தும் குருநாதரிடம் திருவடி தீட்சை பெற்ற பிறகு, அடிகளாரின் வாழ்க்கையே மாறிவிட்ட காரணத்தால், திருஉத்தரகோசமங்கை, மதுரை, திருக்கழுக்குன்றம் ஆகிய ஊர்களில்கூடக் குருநாதரே காட்சியளிக்கின்றார். ஆதலால், பிட்டுக்கு மண் சுமந்தவனும் குதிரைச் சேவகனாக வந்தவனும் பெருந்துறையானே என்ற எண்ணம் அடிகளார் மனத்தில் வேரூன்றிவிட்டது.