பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இப்பாடலின் முதலடியில் அடிகளாரையும் அறியாமல் ஒரு நகைச்சுவை புகுந்துவிட்டதோ என்று நினைய வேண்டியுள்ளது. அந்த நகைச்சுவை நேர்பட என்ற சொல்லின்மூலம் வெளிப்படுகிறது. மண்சுமந்த வரலாற்றை அறிந்தவர்கள் ஒரு செய்தியை நன்றாக அறியமுடியும். வந்தியிடம் வந்த கூலியாள் வைகைக் கரையடைக்கச் செல்லும் முன்னரே, மிகுதியான பிட்டை வாங்கி உண்டுவிட்டான். அம்மட்டோடு நின்றானா? தன்னுடைய அழுக்கடைந்த பழங் கந்தையில் நிரம்பப் பிட்டை வாங்கி, மூட்டையாகக் கட்டிக் கொண்டான். இவ்வளவு கூலி பெற்றுக்கொண்ட அவன், ஆற்றின் உடைப்பை அடைத்தானா, அடைப்பதற்கு ஏதேனும் முயற்சி செய்தானா என்றால், இல்லை என்பதே விடையாகும். அத்தோடு நின்றானா? நூற்றைக் கெடுத்தது குறுணி என்பது தமிழகத்துப் பழமொழி. அதுபோல இந்தக் கூலியாள் தனக்குரிய பணியைச் செய்யாததுமட்டு மன்று, ஒழுங்காகப் பணிபுரிந்துகொண்டிருந்த ஏனையோரையும் கூவியழைத்துத் தன் மூட்டையிலிருந்து பிட்டைப் பங்கிட்டுத் தந்து அவர்கள் வேலையையும் கெடுத்தான். இப்படிச் செயல் செய்த ஒருவனைப் பிட்டு நேர்பட மண் சுமந்தான்’ என்கிறார் அடிகளார். அதாவது வாங்கிய பிட்டின் மதிப்பிற்கு ஏற்ற அளவு மண்சுமந்தான்; கூலிக்கு ஏற்ற மண்சுமந்தான் என்றல்லவா அடிகளார் பாடுகின்றார்! இப்படிப் பாடிக்கொண்டு வரும்போதே மதுரையில் நடந்த கதை அவர் மனத்தில் நிழலாடுகின்றது. ஆதலால், அத்தொடரைப் பித்தனே' என்ற சொல்லோடு முடிக்கின் றார். அவன் பித்தன் ஆதலால், கூலிக்கு ஏற்ற வேலை செய்யவில்லை என்ற பொருளும் இதில் அடங்கியுள்ளது. இவையல்லாமல் மற்றொரு அற்புதமான பொருளும் 'பித்தன்' என்ற சொல்மூலம் கிடைக்கின்றது.