பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 தில்லையில் அருளியது என்று உறுதியாக அறியக்கூடிய கோயில் மூத்த திருப்பதிகம், கண்ட பத்து என்ற இரண்டிலும் அவர் எதிர்பார்த்து வந்த எதுவும் நடைபெறவில்லை என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. கோயில் மூத்த திருப்பதிகத்தில் அடியாரிடையே இருக்கும் அருளைப் புரியாய் என்று பத்துப் பாடல்களிலும் ஒரே கருத்தை வலியுறுத்திப் பாடியவர், கண்ட பத்தில் முற்றிலும் வேறு வகையான சிந்தனையை ஒடவிடுகிறார். குருநாதரைக் காணவேண்டும், அடியார் கூட்டத்திடையே அமரவேண்டும் என்ற எண்ணம் எதுவும் அவர் மனத்தில் தோன்றியதாக இந்தப் பதிகத்தில் எந்தக் குறிப்பும் இல்லை. பத்துப் பாடல்களிலும் பொதுவாக, பிறவியின் இழிவு, குறிப்பாகத் தம் பிறப்பின் இழிவு என்பவற்றை வரிசைப் படுத்திப் பாடுகின்றார். இப்படிப்பட்ட இழிந்த நிலை யிலிருந்த தம்முடைய பிறப்பை அறுத்து ஆட்கொண்ட வரைத் தில்லையில் கண்டேன் என்று எட்டுப் பாடல்களில் பேசுகிறார். ஆனால், தில்லைக்கூத்தனைப் பற்றிய வருணனையோ அவன் ஆட்டம்பற்றிய செய்தியோ அவன் வடிவழகைப்பற்றிய செய்தியோ கூறும் எந்த ஒரு சொல்லும் கண்ட பத்தில் இடம்பெறவில்லை. அப்படியானால் பிறப்பை அறுத்தவரை 'அணிகொள் தில்லை கண்டேனே' என்ற தொடருக்கு என்ன பொருள் கொள்வது? அன்றியும் இச்செய்தி இங்குப் புதிதாகப் பேசப்படவில்லை. குருநாதர் பிறப்பை அறுத்த செய்தி முன்னரே பலப்பல பாடல்களில் பேசப்பெற்றுள்ளது. 'பொதுவினில் வருக என்று கட்டளையிட்ட குருநாதர் எதற்காக அக்கட்டளையை இட்டார் என்று அடிகளார் சிந்திக்காமலா இருந்திருப்பார்! எதற்காக என்ற வினா அவருடைய மனத்தில் பலமுறை தோன்றியிருக்க வேண்டும். ஆனால், அதற்குரிய விடை எங்கும் நேரடியாகப் பேசப்பெறவில்லை.